வெள்ளி, ஜனவரி 31, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 100 பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. (991)
பொருள்: எவரிடத்திலும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை என்னும் சிறப்பினை எளிதில் பெறலாம்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

தன்னிடம் உள்ளதை இல்லை என்று சொல்வது பாசாங்கு(சிறு நடிப்பு). அதேபோல் தன்னிடம் இல்லாததை உண்டு என்று சொல்வது பம்மாத்து(உலக மகா ஏமாற்று)

வியாழன், ஜனவரி 30, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. (990)

பொருள்: பல குணங்களாலும் நிறைந்த சான்றோர்கள் தம் பெருந்தன்மையில் குன்றுவாராயின் இப்பெரிய உலகமும் தன் பாரத்தைச் சுமக்க இயலாததாய் அழியும்.

இன்றைய பொன்மொழி

புத்தர்

நம்பிக்கையும் நேர்மையும் இருப்பதே உயர்ந்த பாதுகாப்பான பொக்கிஷமாகும். இந்த இரண்டு குணங்களையும் கொண்டிருப்பவர்கள் எங்கு சென்றாலும் பாராட்டப்படுவார்கள்.

புதன், ஜனவரி 29, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை

ஊழிபெயரினும் தாம்பெயரார், சான்றாண்மைக்கு
ஆழிஎனப்படு வார். (989)

பொருள்: பெருந்தன்மை என்ற கடலுக்குக் கரை எனக் கூறப்படுபவர், கடல் கரையுள் நில்லாமல் ஊழிக் காலத்தால் நிலை திரிந்தாலும் தாம் தம் அறநெறியிலிருந்து நிலை தவறமாட்டார்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

கிழக்கோ, மேற்கோ தன்வீடே தனக்கு இன்பம்.

செவ்வாய், ஜனவரி 28, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
 
 
இன்மை ஒருவற்கு இளிய அன்று; சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின். (988)

பொருள்: ஒருவனுக்குச் சால்பு என்னும் மன வலிமை இருக்கும்போது வறுமை என்பது இழிவு ஆகாது. (988)

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

தினசரி மரணத்தை நினைப்பாயானால் உன் உள்ளம் ஒருவருக்கும் கேடு நினைக்காது. உதடுகள் கேடுகள் பேசாது.

திங்கள், ஜனவரி 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் 
என்ன பயத்ததோ சால்பு. (987)
 
பொருள்: தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இனிய செயல்களையே செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒரு மனிதனின் பெருந்தன்மை என்ன பயனை உடையது? யாதொரு பயனும் இல்லாதது.

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து 
  

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

ஞாயிறு, ஜனவரி 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99  சான்றாண்மை
 
சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்வி 
துலை அல்லார் கண்ணும் கொளல். (986)

பொருள்: சால்பாகிய(சகிப்புத்தன்மை/பெருந்தன்மை) பொன்னின் அளவை அறிதற்கு உரை கல்லாகிய செயல் யாதென்றால், அது சான்றோர்கள் தம் தோல்வியை இழிந்தாரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உனக்குக் கஷ்டம் வரும்போது அதை உன் தாய், மனைவி, நண்பர்களிடம் மட்டுமே சொல். வேறு யாரிடமும் சொல்லாதே.

சனி, ஜனவரி 25, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை

ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர் 
மாற்றாரை மாற்றும் படை. (985)
 
பொருள்: ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது அதற்குரியவர்களைப் பணிந்து தம்மோடு சேர்த்துக் கொள்ளுதலாகும். அதுவே சால்புடையார் தம் பகைவரை அழிக்கும் கருவியுமாகும்.

இன்றைய சிந்தனைக்கு

மகாபாரதம்

பிறரை நிந்தனை செய்வதன் வாயிலாக ஒருவன் தனது கௌரவத்தைத் தேடக் கூடாது. அவன் தன்னுடைய நல்ல குணங்களாலேயே மேன்மையைத் தேடிக் கொள்ள வேண்டும்.

வெள்ளி, ஜனவரி 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 99 சான்றாண்மை
கொல்லா நலத்தது நோன்மை; பிறர் தீமை 
சொல்லா நலத்தது சால்பு. (984)

பொருள்: தவம் எனப்படுவது ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினை அடிப்படையாகக் கொண்டது. அது போலச் சால்பு என்பது பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் தன்மையாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

புதிய நண்பர்களைப் பெறமுடியாதவன்; வாழும் கலையை மறந்தவன்.

வியாழன், ஜனவரி 23, 2014

ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டுள்ள முழு நீளத் தமிழ்த் திரைப்படம்.

டியூப் தமிழ்’ மற்றும் ‘கிரியேட்டிவ் சிட்டி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில் வெகு விரைவில் 'உயிர்வரை இனித்தாய்' எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. முழுக்க, முழுக்கப் புலம்பெயர் தமிழர்களால் உருவாக்கப் பட்டுள்ள இத்திரைப்படத்திற்குப் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. மேற்படி திரைப்படத்திற்கு டென்மார்க்கில் வாழும் கலைஞராகிய 'நடிக வினோதன் த.யோகராஜா அவர்களும், 'அந்திமாலையின் ஆசிரியர்' அவர்களும் வழங்கிய வாழ்த்துச் செய்திகளை உங்களுக்காகத் தருகிறோம்.

 கீழ்க்காணும் வீடியோ இணைப்பில் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளைக் காணலாம்.




டென்மார்க்கின் இரு முக்கிய கலைஞர்களின் கருத்துரைகள்..

yogaமூத்த கலைஞர் நடிகவினோதன் த.யோகராஜா அவர்களின் வாழ்த்துரை..
எனது நெருங்கிய நண்பன் கே.எஸ்.துரை அவர்களின் படைப்பான “உயிர்வரை இனித்தாய்” என்ற திரைப்படம் வெகுவிரைவில் திரைக்குவர இருக்கிறது.
ஈழத்திலிருந்து இன்றுவரை இருவரும் ஒன்றாகக் கலையில் பயணித்து வருகிறோம்.

அவருடைய படைப்புக்கள் தரமானவை என்பதை நான் நன்கு அறிவேன்.
இத்திரைப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தேடித்தரும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

இத்திரைப்படத்தில் நடித்த கலைஞர்கள் எல்லோரையும் நான் நன்கு அறிவேன்.
கதாநாயகன் வஸந்த்,தனது ஏழாவது வயதிலேயே ,நான் நடித்ததை எனக்கே நடித்துக் காட்டியவன்.

இவன் முன்னணி நடிகனாக வருவான், என்று அன்றே எனக்குத் தெரியும், கலையின்மேல் இவன் வைத்திருக்கும் பற்று இவனைக் காப்பாற்றும்.
இத்திரைப் படத்திற்கு இன்னுமொரு சிறப்பு,என் தம்பிமார் இருவர் இதில் நடித்திருப்பது.

சின்னக்குட்டி தயநிதி,இரா.குணபாலன் இவர்களைப் பற்றி நான் எடுத்துரைப்பது,பூக்கடைக்கு விளம்பரம் செய்வதுபோல் ஆகிவிடும்.
புலம்பெயர் நாடுகளில் பேசப்படுகின்ற திறன்சார் கலைஞர்கள் இவர்கள்.
இந்திய நடிகர்களுக்கீடாக... மேலும் 

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 99 சான்றாண்மை

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு 
ஐந்துசால்பு ஊன்றிய தூண். (983)
பொருள்: அன்பும், பழிபாவங்களுக்கு வெட்கப்படுதலும், ஒப்புரவு செய்தலும், தாட்சண்யம்(இரக்கம்) காட்டுதலும், உண்மையே பேசுதலும் ஆகிய ஐந்தும் 'சால்பு' என்னும் உயர்ந்த குணமாகிய பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஆகும்

ஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் தோசை

தேவையான பொருட்கள :

ஓட்ஸ் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 ஸ்பூன்

செய்முறை :

• ஓட்சை தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும்.

• ஊற வைத்த ஓட்சை தண்ணீருடன் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

• அரைத்த மாவில் புளித்த தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணிநேரம் கழித்து தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

•  டயட்டில் இருப்பவர்கள் ஓட்சை இப்படியும் செய்து சாப்பிடலாம்.

• இதில் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்தும் செய்யலாம்.

நன்றி: மாலைமலர்

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்குக் கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ, இழப்புகளோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் உன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். பிறகு, நிச்சயமாக மற்றவை எல்லாம் நடந்தேறி உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.

புதன், ஜனவரி 22, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை
 
 
குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. (982)

பொருள்: சான்றோர் நலம் என்று குறிப்பிடுவது ஒரு மனிதனின் 'நல்ல குணம்' என்னும் நலமேயாகும். ஏனைய உறுப்புக்கள் முதலியவற்றால் உண்டாகிய நலம் எந்த ஒரு நலத்திலும் சேராது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

ஞானம் என்பது வானத்து தேவதைகளிடம் இருந்து இறங்கி, மனிதனின் மூளைக்குள் நுழைவது அல்ல. அது மனிதனின் சிந்தனையும் கல்வியும் இரண்டறக் கலக்கும்போது உதயமாவது ஆகும்.

செவ்வாய், ஜனவரி 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 99 சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. (981)
பொருள்: தம் கடமையை உணர்ந்து சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு நல்லனவாகிய குணங்கள் யாவும் இயல்பாகவே அமைந்திருக்கும் என்று கூறுவர் பெரியோர்.

இன்றைய பொன்மொழி

புத்தர் 
துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உங்கள் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதீர்கள்.

திங்கள், ஜனவரி 20, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை

அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் 
குற்றமே கூறி விடும். (980)
 
பொருள்: பெருமை உடையவர்கள் அடுத்தவர்களுக்கு அவமானம் ஏற்படக்கூடிய, பிறருடைய குற்றங்களை மறைப்பார்கள். சிறுமையான கீழ்த் தரமான மனிதர்கள் எப்போதும் பிறருடைய குற்றங்களைக் கூறி அடுத்தவரைத் தூற்றித் திரிவர்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

பெறுமதி மிக்கவை என அறிவில்லாதோர் எண்ணுகின்ற 'உடமைகளுக்குக்' கொடுக்கின்ற மதிப்பை உயர்வான மனித உள்ளங்களுக்குக் கொடுங்கள். ஏனெனில் உடமைகள் ஒருநாள் அழியும். அழியா வரம் பெற்றவை 'உயர்ந்த உள்ளங்களே'.

ஞாயிறு, ஜனவரி 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை

பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை 
பெருமிதம் ஊர்ந்து விடல். (979)
 
பொருள்: கர்வம் இல்லாதிருப்பதே ஒரு மனிதனுக்குப் பெருமை. கர்வம் கொண்டு இருப்பது அவனுக்குச் சிறுமையே ஆகும்.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் மன்னன்  கூடத் தன் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போல அழகான எதையும் அணிந்திருந்ததில்லை. அழகானவை எல்லாம் விலையுயர்ந்தவை என்று எண்ணாதீர்கள்.

சனி, ஜனவரி 18, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை

பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை 
அணியுமாம் தன்னை வியந்து. (978) 
 
பொருள்: பெருமைக்குரிய மனிதர்கள் எப்போதும் பணிவாகவே நடந்து கொள்வர். சிறுமை உடையவர்களோ தம்மைத் தாமே எப்போதும் வியந்து பாராட்டிக் கொள்வர். 

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

ஆசையுள்ள மனிதர்களுக்கே துன்பங்கள் அதிகமாகும்.
ஆசையில்லாத மனிதரைக் கண்டு துன்பங்கள் விலகி ஓடும்.

சர்க்கரை நோயாளிகள் உணவு பழக்க வழக்கம் என்ன?

சர்க்கரை நோயாளிகள் மிகவும் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது உணவு பழக்க வழக்கமே ஆகும். இது சித்தர்களால் நீண்ட நெடுங்காலமாகவே வலியுறுத்தப்பட்ட கருத்தாகும். 

உணவில் ஒரு ஒழுங்கையும் நெறிமுறையையும் கடைப்பிடிப்பதன் மூலமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நல்ல முறையில் சீராக வைத்திருக்க முடியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறையாமலும், அதிகரிக்காமலும் சரியான அளவில் வைத்திருப்பதன் மூலம் எளிதாக ஆரோக்கியத்தைப் பேண இயலும். 

உணவில் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை சர்க்கரை நோயுள்ளவர்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். இதைக் கடைப்பிடிப்பதன் மூலமே நீங்கள் தினமும் மகிழ்ச்சியாக இருக்கலாம், தேவைப்பட்டால் உடல் எடையை குறைக்கலாம். 

இருதய நோய்கள், ஏனைய சர்க்கரை நோயை ஒட்டி வரும் நோய்களையும் எளிதில் தவிர்க்க முடியும். உணவை ஒரே வேளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

காலைச் சிற்றுண்டி சுமார் காலை 8.00 முதல் 9.00 மணிக்குள்ளும், பின் சிறிது அவித்த சுண்டல் போன்றவை சுமார் 11.00 மணிக்கும், மதிய உணவு 1 மணி முதல் 2 மணிக்குள்ளும் மாலையில் 1 கப் டீ மற்றும் அவித்த பயறு அல்லது 

சர்க்கரை இல்லாத பிஸ்கட் போன்றவை மற்றும் இரவு 8 மணிக்கு இரவு உணவும் எடுத்துக் கொள்வது உத்தமம். ஒவ்வொருவரும் தங்களது வேலைக்கு ஏற்ப உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 
நன்றி: amarkkalam.net

வெள்ளி, ஜனவரி 17, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை

இறப்பே புரிந்த தொழிற்றுஆம் சிறப்புந்தான் 
சீர்அல் லவர்கண் படின் (977)  
 
பொருள்: உயர்வான மனிதர்களிடம் அமைய வேண்டிய சிறப்புக்கள் எதுவும் கீழ்த்தரமான மனிதர்களிடம் சென்று சேர்ந்தால் அஃது அவர்களிடம் செருக்கினை அதிகரித்து விடும். 

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

தினமும் கீதையைப் படித்து அதன் வழியே நடக்கின்ற 'கீதாப்பியாசம்' செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான். மரணமடையும்போது 'கீதை' என்று உச்சரிக்கும் மனிதன் சொர்க்கத்தையடைகிறான்.

வியாழன், ஜனவரி 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 98 பெருமை

சிறியார் உணர்ச்சியுள் இல்லை, பெரியாரைப் 
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. (976)
பொருள்: பெரியவர்களை வழிபட்டு, அவர்கள் குணங்களை நாமும் தேடிக் கொள்வோம் என்ற எண்ணம் சிறியவர்கள்(கீழ்த்தரமானவர்கள்) மனத்தில் எப்போதும் உண்டாகாது. அவர்களது சிந்தனை எப்போதும் கீழ்த்தரமாகவே இருக்கும்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர்

நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

புதன், ஜனவரி 15, 2014

லண்டனில் விமானத்தை மறித்த பறக்கும்தட்டு

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு மேற்கே பெர்க்‌ஷைர் பகுதிக்கு மேலே 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ-320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்த சென்றுள்ளது. பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது.
ufos_over_londonஉடனே அந்த விமானி, லண்டன் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பரபரப்படைந்த லண்டன் விமான நிர்வாகம் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறது. இருந்தும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மறைமுக பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 98 பெருமை

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை உடைய செயல். (975)
பொருள்: பெருமை உடையவர்கள் தாம் வறியவரான போதும் செய்வதற்கு அரிய தம் செயல்களைச் செய்ய வேண்டிய முறைப்படி விடாது செய்து முடிக்க வல்லவராவர்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

சாதிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இள வயதிலேயே ஆசைப்படுங்கள், ஆரம்பித்து விடுங்கள். ஏனென்றால் தலைசிறந்த சாதனைகள் பெரும்பாலும் இளமையின் சாதனைகளே. ஆனாலும் சாதிப்பதற்கு 'வயது' ஒரு தடையில்லை என்பதையும் மறவாதிருங்கள்.

செவ்வாய், ஜனவரி 14, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்


குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 97 மானம்


ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. (974)

பொருள்: கற்புள்ள பெண்ணைப்போல் தன்னிடம் ஒழுக்கத்தைக் காத்துக் கொள்பவன் சிறந்த பெருமை அடைவான்.

இன்றைய பொன்மொழி

புத்தர்

பிரியம் உள்ளவரைக் காணும்போதும், பிரியம் இல்லாதவரைக் காணும்போதும் உங்கள் மனதில் 'வேதனை' என்ற உணர்ச்சியே ஏற்படுகிறது. ஆனால் இதில் ஒன்றை 'வேதனை' என்றும், மற்றொன்றை 'ஆனந்தம்' என்றும் பெயரிட்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.

திங்கள், ஜனவரி 13, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல் லவர். (973)
 
பொருள்: செயற்கரிய(உயர்ந்த) செயல்களைச் செய்யாத சிறியவர்கள் உயர்ந்த நிலையில் இருந்தாலும் பெரியவர் ஆக மாட்டார்கள். உயர்ந்த செயல்களைச் செய்தவர்கள் வாழ்க்கை நிலையில் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் ஒரு போதும் சிறியவர்கள் ஆக மாட்டார்கள். அவர்கள் உயர்வான மனிதர்கள் ஆவர்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உலகில் நல்ல ஆட்சி நடைபெறும் நாடு என்று ஒன்றைக் காணவே முடியாது. ஏனெனில் உலகிலுள்ள ஆட்சி முறைகள் அனைத்தும் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானவைதான்.

ஞாயிறு, ஜனவரி 12, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான். (972)
 
பொருள்: மக்களாகப் பிறந்த எல்லோர்க்கும் பிறப்பு ஒரே தன்மையானது ஆகும். ஆனால் அவ்வுயிர்களின் உயர்வு, தாழ்வு அவரவர் செய்யும் தொழில்களில் உள்ள வேறுபாடுகளைப் பொறுத்தவை.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 

ஒரு ஊழியன் இரண்டு எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்க முடியாது. எவரும் இரு தலைவர்களுக்கு இதய சுத்தியுடன் பணிவிடை செய்ய முடியாது. அதேபோல் நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஒரே நேரத்தில் பணிவிடை செய்ய முடியாது.

சனி, ஜனவரி 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு 
அஃது இறந்து வாழ்தும் எனல். (971)
 
பொருள்: ஒருவனுக்குப் புகழாவது ஊக்க மிகுதியே ஆகும். ஒருவனுக்கு இழிவாவது "ஊக்கமான செயல்களைக் கைவிட்டு உயிர் வாழ்வோம்" என்று கருதுவதாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

ஆசைகள் மனித இனத்தை ஆட்டிப் படைக்கும் கண்ணுக்குத் தெரியாத 'சக்திகள்' ஆகும். அவற்றை நிறைவேற்றுவதிலோ, திருப்தி செய்வதிலோ மன அமைதி ஏற்படாது. அவற்றை மட்டுப் படுத்துவதுதான்  'மன அமைதிக்கு' வழியாகும்.

வெள்ளி, ஜனவரி 10, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்

இளிவரின் வாழாத மானம் உடையார் 
ஒளிதொழுது ஏத்தும் உலகு. (970)
 
பொருள்: தமக்கு ஓர் இழிவு வந்தபோது உயிர் வாழ விரும்பாத மானமுடையவரின் புகழ் வடிவை, இவ்வுலகத்தார் என்றும் வணங்கிப் போற்றுவர்.

இன்றைய பொன்மொழி

ஓஷோ 

நீங்கள் வயதாவதால் சிரிப்பை நிறுத்துவதில்லை.
ஆனால் நீங்கள் சிரிப்பை நிறுத்துவதால்தான் வயதானவர் ஆகிறீர்கள்.

வியாழன், ஜனவரி 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (969)
 
பொருள்: தனது உடலில் உள்ள உரோமக் கற்றையில்(மயிர்த் திரளில்) ஒரு முடியை(மயிரை) இழக்க நேர்ந்தாலும் உயிர் வாழ விரும்பாத கவரிமானைப் போன்று மானமுள்ள மனிதர்கள், மானம் அழிய நேர்ந்தால்(அவமானம் ஏற்பட்டால்) அதனைத் தாங்காமல் இறந்து விடுவர்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மிகக் கோழைத்தனம்.

புதன், ஜனவரி 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 97 மானம்


மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழியவந்த இடத்து. (968)

பொருள்: உயர்ந்த குடும்பத்தின் வலிமையாகிய மானம் அழிய நேர்ந்தால் இறப்பதை விட்டுப் பயனில்லாத, மானம் இழந்த உடம்பினைக் காப்பற்றி வாழும் வாழ்வானது, இறவாமைக்கு மருந்து ஆகுமா? இல்லவே இல்லை.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்
  

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் பக்தியுடன ஆகக் குறைந்தது பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ பாதியோ சுலோகங்களை மனப் பாடம் செய்வானாகில் சந்திரலோகத்தில் பத்தாயிரம் வருடங்கள் வாழும் பேறு பெறுகிறான். கீதையைப் படித்துக்கொண்டிருக்கும்போது உயிர் துறப்பவன் மீண்டும், மீண்டும் மனிதப் பிறவி அடைந்து இன்பமான வாழ்க்கை வாழுவான்.

செவ்வாய், ஜனவரி 07, 2014

மரண அறிவித்தல்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் 'ஒல்போ' நகரத்தை  (Ålborg) வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மாயாஜாலக் கலைஞரும், அறிவிப்பாளரும், நடிகருமாகிய சின்னத்தம்பி இராஜகோபாலன் அவர்கள் 06-01-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
தோற்றம்: 06.10.1955
மறைவு: 06.01.2014
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பூமணி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளன், தயான், பிரசன்னா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேந்திரன், சிவராசா, உதயகுமார், ரஞ்சித்குமார், அன்னராணி, லோகேஸ்வரி, சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இந்துமதி, ஜனனிதா, நிரோஷிதா, சீதாராமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரெஜினா, ஹரிணி, இஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் ஈமக் கிரியைகள் மற்றும் தகனக் கிரியைகள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: முரளிதரன், சுமன், பாலச்சந்திரன், ரெஜிரூபன், லிங்கதாசன். (டென்மார்க் நண்பர்கள்)


நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:  வியாழக்கிழமை 09/01/2014, 09:00 மு.ப — 10:30 மு.ப

முகவரி:  Søndre Kirkegård Blomstermarken 62, 9000 Aalborg, Denmark


கிரியை

திகதி:  வியாழக்கிழமை 09/01/2014, 10:30 மு.ப — 01:00 பி.ப

முகவரி:  Søndre Kirkegård Blomstermarken 62, 9000 Aalborg, Denmark


தகனம்

திகதி:  வியாழக்கிழமை 09/01/2014, 01:00 பி.ப

முகவரி:  Søndre Kirkegård Blomstermarken 62, 9000 Aalborg, Denmark

தொடர்புகளுக்கு:
அருண் கிருஷ்ணா(மருமகன்) — டென்மார்க்: 0045 60529120

ஜனனி தயான் — டென்மார்க்:  0045 25444192

*இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.