திங்கள், டிசம்பர் 09, 2013

ரணம்

என் மனைவி மாமிசம் ஏதும் சாப்பிடுவதேயில்லை.
இலங்கையில் இருக்கும் வரை மாட்டிறைச்சியைத் தவிர அனைத்து இறைச்சி வகைகளையும் நான் சாப்பிட்டிருக்கின்றேன். . . .இல்லை அது தவறு. . . பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் களவாக ஒருநாள் சக மாணவர்களுடன் படத்திற்குப் போய் விட்டு வரும் பொழுது ஐந்துலாம்படிச் சந்தியில் உள்ள சாப்பாட்டுக் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டேன் என்பது ஞாபகம் இருக்கிறது.
சாப்பிட்டபிறகுதான் தெரிந்தது – அதில் மாட்டிறைச்சி கலக்கப்பட்டிருந்தது என்று.
கையை வாய்க்குள் விட்டு வாந்தியா எடுக்க முடியும்?
ஆனால் அதன் ருசி நன்றாகக் தான் இருந்தது என்பது இப்பொழுதும் எனக்கு ஞாபகம்.
அதற்காக அதனைத் தேடிப் பின்பு போகவில்லை – போகவிருப்பம் இருந்தாலும் மாட்டிறைச்சி சாப்பிட்டால் பாவம் கிடைக்கும் என்று அம்மாவும் அம்மம்மாவும் சின்னனில் இருந்து சொல்லிக் கொண்டிருந்தது இப்பவும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
*
வெள்ளிக்கிழமை தவிர எங்கள் வீட்டில் எப்பொழுதும் மீன் இருக்கும். காலநிலைக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு எந்த மீன்கள் மலிவோ அதுவே அதிகமாக எங்கள் வீட்டுச் சட்டிக்குள் வரும். பொதுவாக மாதச்சம்பளத்தில் வண்டியோட்டும் குடும்பங்களின் நிலையும் இதுதான்.
எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது – மழைகாலம் என்றால் ஒட்டி ஓராவும், முரல் காலம் என்றால் முரல்புட்டும் எங்கள் வீட்டில் எப்பொழுதும் இருக்கும்.
எதுவுமே இல்லாவிட்டாலும் இறால் எல்லாக் கறிகளுக்கும் கொஞ்சமாகவோ அன்றில் அதிகமாகவோ போடப்பட்டிருக்கும். தவிரவும் வெந்தயக் குழம்பாக. . . சொதியாக. . . சின்ன வெங்காயத்துடன் சேர்த்து பொரித்த பொரியலாக. . .
இதில் இறாலுக்கு மட்டும் ஒரு விசேடம் உண்டு. முதன்நாளோ. . .அன்றில் அதிகாலையில் பிடிக்கப்பட்டிருந்தாலும் பொதுவாக பத்துமணிக்கு சந்தை கூடும் பொழுதும் அதில் பல இறப்பதில்லை. அம்மா, அல்லது அம்மம்மா அதன் தோலை நீக்க முதல் அவற்றைச் சட்டிக்குள் போட்டு சுடுநீரை ஊற்றும் பொழுது அவை ஒரு தரம் துள்ளிவிட்டு அடங்கிப் போகும்.
பாவங்களாய்த்தான் இருக்கும். ஆனால் அந்த பரிதாப உணர்ச்சியும் கண்களால் பார்ப்பதோடு செத்துப் போகும். இறால் பொரியலை கடைசியாக சாப்பிடும் பொழுது அது ஒன்றும் கண்ணுக்கு முன் வருவதில்லை.
*
ஆனால் டென்மார்க்கிற்கு வந்த பின்பு கடற்கரையில் விற்ற கல்லுப் போன்ற ஒரு மீனை
குசினித் தொட்டியில் போட்டு விட்டு அதனைக்  கழுவுவதற்காக கொஞ்சம் சுடுநீரைத் திறந்து விட்ட பொழுது அவை இறக்காமல் இருந்ததனால் அவை துள்ளிப் பாய்ந்து நிலத்தில் விழுந்து துடித்ததும். . .சியாமளா பயந்து சத்தம் போட்டுக் கொண்டு மாடிப்படியில் ஓடியதும். . .  நான் மீன்களைப் பிடித்து உடனே ஐஸ் பெட்டியில் போட்டு அவற்றை விறைக்க வைத்து சாக்கொண்டதும். . .  பின் ஒரு கிழமையாக சியாமளா என்னுடன் கதைக்காமல் ஒரு கொலைபாதகனைப் பார்த்துக் கொண்டு திரிந்தது போல நடந்தது கொண்டமையும். . . எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.
அப்பொழுது அவள் நாலுமாதக் கர்ப்பம் வேறு.

மாமிசம் என்றாலே  என்ன என்று தெரியாமல் வளர்ந்த அவளுக்கு அன்று நான் செய்தது பெரிய உயிர்க்கொலை தான்... மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக