வியாழன், டிசம்பர் 26, 2013

'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்?

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
இலங்கைத் தமிழர்கள் 'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்?

மேலேயுள்ள கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்லி விட முடியும். இருப்பினும் எமது தமிழ்நாட்டு உறவுகளுக்கும், ஈழத்தில் பிறந்து வளர்ந்தாலும் காரணம் அறியாமல் ஒரே சொல்லைச் சொல்லிக் கொண்டிருக்கும் எனது தாயக உறவுகளுக்கும், புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கும் ஒரு சிறிய புரிதலை ஏற்படுத்துவதே எனது இந்தச் சிறிய பகிர்வின் நோக்கமாகும்.
கடந்த சில தினங்களாக முகநூலிலும், இணையங்களிலும் ஒருவருக்கொருவர் 'கிறிஸ்துமஸ்' வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். முகநூலில் எமது இலங்கைத் தமிழ் மக்கள் 'கிருஸ்துமஸ்' வாழ்த்துத் தெரிவிக்கும்போது "இனிய நத்தார் வாழ்த்துக்கள்" என்று எழுதியதைப் பார்த்துப் பல வருட காலமாகத் தமிழக உறவுகள் சிறிது குழப்பம் அடைய நேர்ந்திருக்கலாம். அது என்ன 'நத்தார்' வாழ்த்துக்கள்? என்று சிறிது ஆச்சரியம் அடைந்திருக்கலாம்.சிலவேளை இலங்கைத் தமிழில் சிங்கள மொழியின் தாக்கம் அதிகம் இருப்பதால், மேற்படி  'நத்தார்' என்ற சொல்லும் சிங்களச் சொல்லாக இருக்குமோ? என்று
எண்ணியிருக்கலாம். நீங்கள் அவ்வாறு எண்ணியிருந்தால் உங்கள் கணிப்புத் தவறானது. 'நத்தார்' என்ற சொல் போர்த்துக்கேய மொழிச் சொல்லாகும். போர்த்துக்கேய மொழியில் "இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறுவதற்கு "பெலிஸ் நத்தால்"(Feliz Natal) என்றோ அல்லது "கொம்பிரி மென்டொஸ் பெலோ நத்தால்" (Cumprimentos pelo Natal) என்று கூறுவார்கள். போர்த்துக்கேய ஆட்சி அகன்று ஏறத்தாழ முந்நூற்றைம்பது வருடங்கள் சென்று விட்ட போதிலும் இலங்கை மக்கள் பாலன் பிறப்புத் தினத்தைக் குறிக்கும் 'நத்தால்' என்ற போர்த்துக்கேய மொழி வார்த்தையை அப்படியே இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டைப் போர்த்துக்கேயர் கைப்பற்றவும் இல்லை, ஆட்சி செய்யவும் இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தைகளின் தாக்கம் மிகக் குறைவு எனலாம். சிங்கள மக்கள் பாலன் பிறப்பை(கிருஸ்துமஸ்) தினத்தைக் குறிப்பதற்குப் போர்த்துக்கேய மொழியில் இருந்து கடன் வாங்கிய 'நத்தால்' என்ற வார்த்தையை அப்படியே உபயோகிக்கின்றனர்.அதாவது சிங்கள மொழியில் 'கிறிஸ்துமஸ்' தினத்தைக் குறிப்பதற்கு 'நத்தால்' அல்லது நத்தாலக் (නත්තලක්) எனவும், சிங்கள மொழியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறும்போது 'சுப நத்தாலக் வேவா' (Subha nath-tha-lak vewa/ සුභ නත්තලක් වේවා ) என்றும் கூறுகின்றனர். இலங்கைத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தையாகிய 'நத்தால்' சிறிது திரிபடைந்து 'நத்தார்' ஆக மாறியது.
எவ்வாறு போர்த்துக்கேயச் சொற்களாகிய அலுமாரி, அலவாங்கு(கடப்பாரை), அலுப்புநேத்தி(சட்டைப் பின்), கதிரை, கழுசான், குசினி, பீங்கான், துவாய், தவறணை போன்ற சொற்களை விட்டு விட முடியவில்லையோ அது போலவே இந்த 'நத்தார்' என்ற சொல்லையும் இலங்கைத் தமிழ் மக்களால் இன்றுவரை விட்டுவிட முடியவில்லை. இலங்கையர்களை முதன் முதலில் ஆண்ட அந்நிய நாட்டவர்கள்(ஐரோப்பியர்கள்) போர்த்துக்கேயர் என்பதுடன் ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் எம்மை ஆட்சி செய்த அவர்களின் ஆட்சியின் எச்சங்கள்/அடையாளங்கள் அவ்வளவு சீக்கிரமாக அழிந்து போய் விடுமா என்ன? உங்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமான தகவலையும் கூற விரும்புகிறேன். அதாவது போர்த்துக்கேயருக்கு அடுத்து சுமாராக நூறு வருடங்கள் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர்களின் டச்சு மொழிச் சொற்கள் விரைவாகவே இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து விடை பெற்று விட்டன. எஞ்சியிருப்பவை ஒன்றிரண்டுதான். உதாரணத்திற்குச் சில:கந்தோர், தபால், மற்றும் கக்கூசு. இவை மட்டுமன்றி கிறிஸ்துமஸ் தினத்தை நோர்டிக் மொழிகளாகிய டேனிஷ், சுவீடிஷ், நோர்வீஜியன் மொழிகளில் யூல்(Jul) என்று அழைப்பார்கள். இந்தச் சொல்லும் இலங்கைத் தமிழில் கலந்துவிட்டது என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம்தான். 'கிறிஸ்துமஸ்' தினத்தை 'யூல்' என்று அழைத்த வயதான பெண்மணிகளை/ஆண்களை நான் இலங்கையில் கண்டிருக்கிறேன். அவர்கள் அந்தச் சொல்லை எங்கு கற்றுக் கொண்டார்கள் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமே.
இலங்கையில் மட்டும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஏன் 'நத்தார்' என்று பெயர்? என்று ஆய்வு செய்யப் புகுந்ததால் எனக்குக் கிடைத்த விடையே போர்த்துக்கேய மொழியின் தாக்கம் அது என்பதாகும். உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.உங்கள் அனைவர்க்கும் இனிய 'கிருஸ்துமஸ்' வாழ்த்துக்கள்; மற்றும் பிறக்க இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 2014 உங்கள் அனைவர்க்கும் ஏற்றத்தையும், செழிப்பையும் அள்ளித் தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

8 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
நத்தார் என்ற சொல்லுக்கு மிகச் சிறப்பான விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

Seelan Germany சொன்னது…

All the best to Anthimaalai.

balan சொன்னது…

Nanry.

தமிழ் செல்வா சொன்னது…

அன்பு நண்பருக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள். உங்களது தேடலுக்கு பாராட்டுக்கள். உண்மையில் தமிழில் இருந்தே அவர்கள் (போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், இத்தாலியர்கள்) கடன் வாங்கியிருக்கிறார்கள். நத்தார் என்பது தமிழ் வார்த்தை. நாதி என்றால் பிறப்பு என்றே பொருள். நாதியற்றவன் என்றால் பிறப்பு பற்றிய வரலாறு தெரியாதவன் என்று நமக்கு தெரியும். நாற்று நடுதல் என்பதும் கூட பயிரின் உயிர் உருவாக்கத்தில் முதல் நிலையில் பிறப்பு அளித்தல் என்றே பொருள்படும்.
அநாதை-பிறப்புக்கு காரணமானவர்கள் இல்லாத நிலை.
அநாதியானவன்- இறைவன்-பிறப்பற்றவன்.
நன்றி.
செல்வராஜ்

anthimaalai@gmail.com சொன்னது…

அன்பு வாசகர்கள் ரூபன், சீலன் ஜெர்மனி, பாலன் மற்றும் செல்வராஜ் அனைவரது வருகைக்கும், பாராட்டுக்களுக்கும், கருத்திடல்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். என்றும் வேண்டும் இந்த இனிய உறவு.

"ஒன்றுபட்டு உயர்வோம்"

அன்புடன்
-ஆசிரியர்-
அந்திமாலை
www.anthimaalai.dk

Lingathasan சொன்னது…

அன்பு நண்பர் செல்வராஜ் அவர்கட்கு,
உங்களது வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிகள்.
'நத்தார்' என்பது தமிழ் வார்த்தை என்றும், அதனை அவர்கள்(போர்த்துக்கேயர்கள்) தமிழில் இருந்தே கடன் வாங்கியிருந்தார்கள் என்றும் கூறியிருந்தீர்கள். இயேசு பிரான் ஆசியாவில் பிறந்திருந்தாலும், கிறீஸ்தவ சமயத்தின் அறிமுகம், இலங்கையிலும், இந்தியாவிலும் போர்த்துக்கேயரின் வருகையுடனேயே ஆரம்பமாகியது. அவர்கள் இலங்கை மண்ணில் கால் வைக்கும்போது(1505 ஆம் ஆண்டு) இயேசு பிரான் பிறந்து ஏறத்தாழ 1500 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில் 'இயேசுவின் பிறப்பைக் குறிக்கும்' கிறிஸ்துமஸ் நாளிற்கு தமிழ்ப் பெயரைச் சூட்டியிருப்பார்கள் என நான் நம்பவில்லை. அதை விடவும் நீங்கள் கூறும் 'நாதி' எனும் தமிழ்ச் சொல் இடத்திற்கு எற்றாற் போல் 'பொருள்' பெறுகிறது. உதாரணமாக 'நாதன்' என்றால் தலைவன், ஆனால் 'நாதியற்றவன்' என்றால் 'துணைக்கு யாருமற்றவன்' அல்லது 'உதவி ஏதும் இல்லாதவன்' என்று பொருள். இதே போல் 'நாதம்' என்றால் 'இசை' அல்லது 'சத்தம்' என்று வேறு பொருளைக் கொண்டு வருகிறது. இறுதியாக 'தமிழில் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்ட ஒரு சொல்லைத் தருகிறேன். தமிழில் புழங்கிய ஒரு விடுகதையில் பின்வருமாறு வரும்:
"கத்திபோல் இலையிருக்கும்,
கவரிமாப் பூப்பூக்கும்,
தின்னாத காய்காக்கும்,
தின்னப் பழம்பழுக்கும்,
நத்தேன்(நாட மாட்டேன்) அந்தக் காயை,
நாடுவேன் அந்தப் பழத்தை"

எனும் விடுகதையில் 'நத்துதல்' என்றால் 'நெருங்குதல்' அல்லது 'விரும்புதல்' என்று பொருள் படுகிறது. ஆகவே உங்களது கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை என்னை மன்னியுங்கள்.

அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்
டென்மார்க்

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று, ‘நத்தார்’ என்ற சொல்லினை வலைப்பக்கம் அதிகம் காண்பேன். இதன் மூலமான வேர்ச்சொல் என்னவாக இருக்கும் என்று யோசிப்பேன். இந்த ஆண்டு உங்களின் பதிவின் மூலம், அது இலங்கைத் தமிழ் வழக்கில் உள்ள போர்ச்சுக்கீசிய மொழியின் மரூஉச் சொல் என்பதனையும் காரணத்தினையும் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி!

Vino Rooby சொன்னது…

நத்தார் என்ற சொல்லுக்கு மிகச் சிறப்பான விளக்கம் அருமை. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நன்றி.
வி.ரூபி.

கருத்துரையிடுக