சனி, நவம்பர் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை 

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. (929)

பொருள்: மது அருந்தி அறிவு மயங்கியவனைக் காரண காரியங்களைக் காட்டி, மது அருந்தாமல் தடுக்க முற்படுவது, தண்ணீரின் அடியில் மூழ்கியவனை மற்றொருவன் விளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்

துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால்,
நாம் துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப் பாவிப்போம். தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிக துன்பத்தைத் தருகிறது.

வெள்ளி, நவம்பர் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை 

களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து 
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். (928)

பொருள்: யாருக்கும் தெரியாமல் மது அருந்துபவன் "நான் ஒருபோதும் மது அருந்தியதில்லை" என்று சொல்வதை விட்டு விட வேண்டும். ஏனெனில் அவன் மது அருந்திய நிலையில் அடுத்தவர்களுக்கு அவனது 'குற்றம்' வெளிப்பட்டு விடும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

தன்னைக் கட்டுப்படுத்தத் தெரியாதவன், பிறரைக் கட்டுப்படுத்தவோ, பிறருக்குத் தலைமை தாங்கவோ ஆசைப்படக் கூடாது. தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவனே உண்மையான தலைவன்.

இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "One must be able to control oneself, before one can hope to govern others"

வியாழன், நவம்பர் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை


கள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர், எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர். (927)

பொருள்: மதுவை மறைவாக(இரகசியமாக) அருந்தி அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்பவர்களுக்குத்  தெரிய வரும்போது அடுத்தவர்களால் எள்ளி நகையாடப் படுவர்(இழிவாகப் பார்க்கப் படுவர்)

இன்றைய சிந்தனைக்கு

சத்ய சாயி பாபா 

நினைவில் வையுங்கள் உண்மையை விடவும் உயர்ந்த ஒழுக்கம் ஏதுமில்லை. அடுத்தவர்களுக்குச் செய்யும் சேவையை விடவும் உயர்ந்த 'வழிபாடு' ஏதுமில்லை.

ஆங்கில மொழியில்: "Remember, there is no morality higher than truth. There is no prayer more fruitful than 'Seva'(service).

புதன், நவம்பர் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும் 
நஞ்சுஉண்பார் கள்உண் பவர். (926)

பொருள்: உறங்கிக் கொண்டிருப்பவர் செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே தினமும் மதுவைக் குடிப்பவர் அறிவு மயங்குவதால் 'விஷம்' குடிப்பவரைவிட வேறுபட்டவர் அல்ல.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உனக்கு அடுத்தவர்களால் எவ்வளவு மரியாதை தரப்படவேண்டும் என நீ எதிர்பார்க்கிறாயோ; அதே அளவு மரியாதையை நீ முதலில் அடுத்தவர்களுக்கு முன்வந்து வழங்கு. அதேபோல் மரியாதைக்குரியவனாக வாழ்.


இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "If you want to be respected, be respectable"

செவ்வாய், நவம்பர் 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்



அதிகாரம் 93 கள் உண்ணாமை

கைஅறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து 
மெய்அறி யாமை கொளல். (925)

பொருள்: ஒருவன் தனது கையில் உள்ள செல்வத்தைக் கொடுத்து மதுவருந்தி, மயங்கிக் கிடப்பதற்குக் காரணம், செய்வது இன்னது என்று புரியாத அவனது அறியாமையே ஆகும்.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாக உள்ள 'கீதை' எனும் இந்த உயர்ந்த ஞானம் உயிர்களை உய்விப்பதற்காக என்னால், அர்ஜுனன் எனும் தலைசிறந்த மாணவனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெறுகிறது.

திங்கள், நவம்பர் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்



அதிகாரம் 93 கள் உண்ணாமை

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும் 
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (924)
பொருள்: 'நாணம்'(தவறு செய்யும்போது ஏற்படும் வெக்கத்தைக் குறிக்கும்) எனப்படும் நல்ல குணம், 'மது' என்று சொல்லப்படும் குற்றமுடையவர்களுக்கு எதிரே நிற்காமல் சென்று விடும். மது அருந்துபவர்கள் 'வெட்கம்', மானம் இவைகளை விடவேண்டிய நிலை ஏற்படும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதனாக இருந்தால் உங்களை எந்தத் துன்பமும் நெருங்காது.

இந்தப் பொன்மொழிக்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "If you are a good human being, nothing bad will happen to you"

ஞாயிறு, நவம்பர் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்



அதிகாரம் 93 கள் உண்ணாமை



ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் எண்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. (923)

பொருள்: மது அருந்திவிட்டுப் பெற்ற தாயின் முகத்தில் விழித்தல் துன்பம் தருவதாகும். அவ்வாறிருக்கையில் குற்றம் கண்டால் கண்டிக்கும் சான்றோரின்(அறிஞரின்) முகத்தில் அது மகிழ்ச்சியைக் காட்டுமா?


இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து

மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். நீங்கள் தர்மம் செய்யும் போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். நீங்கள் தர்மம் செய்யும் போது உங்கள் வலக்கை செய்வது இடது கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

சனி, நவம்பர் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்



அதிகாரம் 93 கள் உண்ணாமை

உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரால் 
எண்ணப் படவேண்டா தார். (922)

பொருள்: அறிவை மயக்கும் கள்ளை(மதுவை) அறிவுடையோர் உண்ணாது விடுவாராக. சான்றோரால் நல்லவராக மதிக்கப்படாதவர் வேண்டுமானால் மதுவை அருந்தட்டும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உங்கள் வாழ்வில் நடக்கும் நல்லவையோ, தீயவையோ அவற்றுக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் எதை விதைத்தீர்களோ அவற்றையே அறுவடை செய்கிறீர்கள். 

இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "You harvest what you plant; whether good or bad"

வெள்ளி, நவம்பர் 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்



அதிகாரம் 93 கள் உண்ணாமை


உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார். (921)

பொருள்: கள்ளின் மேல்(மதுவின்மீது) விருப்பம் கொண்டு நடப்பவர்களைக் கண்டு எக்காலத்திலும் பகைவர்கள் அஞ்சமாட்டார்கள். மது அருந்துபவர்கள் தமக்குள்ள புகழையும் இழந்து விடுவார்கள். இவர்களைப் பகைவர்கள் எளிதாக வெல்வர்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 
  

'நன்றியுணர்வு' உள்ளவன் மகிழ்ச்சியைத் தேடி எங்கும் அலைய மாட்டான். நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியைத் தவிர இந்த உலகில் வாழ்வதற்கு உங்களுக்கு வேறெந்தக் காரணங்களும் இருக்கப் போவதில்லை.

வியாழன், நவம்பர் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 92 வரைவின் மகளிர்

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. (920)
 
பொருள்: பரத்தை(விலை மகள்) மனத்தையுடைய மகளிரும், கள்ளும், சூதும் ஆகிய மூன்றும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நீ வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் உன்னை விட்டு விலகாமல் இருக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது விடாமுயற்சி, விடாமுயற்சி, விடாமுயற்சி.

இதற்கு நிகரான ஆங்கிலப் பழமொழி: "If you want to succeed don't give up"

புதன், நவம்பர் 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 92 வரைவின் மகளிர்

வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் புரைஇலாப் 
பூரியர்கள் ஆழும் அளறு. (919)
 
பொருள்: விலை(பணம்) கொடுக்கின்ற எவரோடும் உடலுறவு கொள்ளும் கட்டுப்பாடில்லாத, அழகிய நகைகள் அணிந்த பொது மகளிரது மெல்லிய தோள்கள் அறிவற்ற கீழ்மக்கள் வீழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ் 


எனது உயர்வான கலையாக இருப்பது கீதை. அது படைப்பின் உருவம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அர்த்தமுள்ள சொற்களாய், முடிவில்லாத உண்மையாய், எனது உருவத்தைச் சொற்களால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உள்ளது.

செவ்வாய், நவம்பர் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 92 வரைவின் மகளிர்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப 
மாய மகளிர் முயக்கு. (918)

பொருள்: வஞ்சம் நிறைந்த பொது மகளிரின்(விலை மகளிரின்) சேர்க்கை, ஆராய்ந்து அறியும் அறிவு இல்லாதவர்க்கு 'மோகினி என்ற பேயிடம் மயங்குவதற்கு ஒப்பானது' என்று கூறுவர்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பகுத்தறிவு, புரிந்துணர்வு மட்டுமன்றி சகல ஞானமும்(அறிவும்) இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். எமக்குக் கிடைத்திருக்கும் மேலான அறிவை 'இறைவன்' எனப் போற்றி வணங்குவோம்.

இதற்கு நிகரான ஆங்கிலப் பழமொழி: "All wisdom comes from the Lord and so do common sense and understanding"

திங்கள், நவம்பர் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்



அதிகாரம் 92 வரைவின் மகளிர்


நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர்; பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள். (917)

பொருள்: பொருள்மேல் ஆசை கொண்டு உடலால் கூடியிருக்கும் பொது மகளிரின் தோள்களை, நெஞ்சத்தை நிறுத்தியாளும் ஆற்றல் இல்லாதவர் பொருந்துவர்(மன வலிமை இல்லாதவர்களே அவள் மீது மையல் கொள்வர்)

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து
உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

ஞாயிறு, நவம்பர் 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 92 வரைவின் மகளிர்

தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் 
புன்நலம் பாரிப்பார் தோள். (916)
 
பொருள்: ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் தம் நலத்தை(இழிவான இன்பத்தை) விற்கும் பொது மகளிர்(விலை மகளிர்) தோள்களை உயர்ந்தோர் தீண்ட மாட்டார்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

மனிதா!
வெந்ததைத் தின்று, வாயில் வந்ததைப் பேசி, விதி வந்தால் சாவோம் என வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நாம் வாழவேண்டும் என்பது முக்கியமல்ல. வாழ்க்கைக்கு அப்பால் நமது பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்வாயாக.

சனி, நவம்பர் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 92 வரைவின் மகளிர்

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் 
மாண்ட அறிவி ன்அவர். (915) 
 
பொருள்: இயற்கையான மதி நலத்தையுடையார் பொருள் தருவார்க்கெல்லாம் ஆசை காட்டும் பொது மகளிரின் இழிவான தொடர்பை விரும்ப மாட்டார்.

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

எப்போதும் விரிந்து ,மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவதை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

வெள்ளி, நவம்பர் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 92 வரைவின் மகளிர்

பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருள்பொருள் 
ஆயும் அறிவி ன்அவர். (914)
 
பொருள்: பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட(எண்ணமாகக் கொண்ட) பொது மகளிரின் இழிந்த இன்பத்தை அறிவினையுடையார் பொருந்தமாட்டார்(விரும்ப மாட்டார்)

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

செல்வந்தராவதும், எழையாவதும் அவரவர் கைகளிலேயே உள்ளது. செலவுக்குமேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வந்தன். வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை.

வியாழன், நவம்பர் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 92 வரைவின் மகளிர்

பொருள் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம்தழீஇ அற்று. (913)
 
பொருள்: கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரின்(விலை மகளிரின்) பொய்யான முயக்கம்(காதல்), பிணம் எடுப்பவர் ஒரு இருட்டறையில் முன் பின் அறியாத பிணத்தைத் தழுவி உறவு கொண்டது போலாகும்.

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்

மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும்,
செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்.

புதன், நவம்பர் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 92 வரைவின் மகளிர்

பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர் 
நயன்தூக்கி நள்ளா விடல். (912)
 
பொருள்: கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பில்லாத பொது மகளிரின் நடத்தையை ஆராய்ந்து விட்டு விடுக.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

எவ்வளவு கல்வியும், செல்வமும் இருந்தாலும் அடக்கமும், பண்பாடும் இல்லாவிட்டால் அவைகளுக்கு மதிப்பும் இல்லை வளர்ச்சியும் இல்லை.

செவ்வாய், நவம்பர் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 92 வரைவின் மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் 
இன்சொல் இழுக்குத் தரும். (911)
 
பொருள்: ஒருவனை அன்பு பற்றி விரும்பாமல் பொருள் பற்றி விரும்பும் மகளிர் பேசுகின்ற இனிய சொல் அவனுக்குத் துன்பத்தைத் தரும்.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்

கீதையின் புகழ்

கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன்.எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை. கீதையின் ஞானத்தில் நின்றுகொண்டு நான் மூவுலகங்களையும் காத்து அருளுகிறேன்.

திங்கள், நவம்பர் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்
 
 
எண்சேர்ந்த நெஞ்சத்து இதனுடையார்க்கு எஞ்ஞான்றும் 
பெண்சேர்ந்துஆம் பேதைமை இல். (910)

பொருள்: நன்றாக எண்ணும் நெஞ்சமும், செல்வமும் உடைய மன்னர்க்கு மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை எக்காலத்திலும் இல்லை.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

சமூக வளர்ச்சி தேக்க நிலையில் உள்ளதென்றால் போதிப்பவர்கள் அதிகமாகவும், உழைப்பவர்கள் குறைவாகவும் இருப்பதுவே காரணம் ஆகும். செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

ஞாயிறு, நவம்பர் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். (909)

பொருள்: அறச்செயலும், பொருட்செயலும் இன்பச் செயல்களும் மனைவியின் ஏவல் வழி நடப்பவரிடத்தில் உண்டாகாது.

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
உங்களிடம் கேட்பவருக்குக் கொடுங்கள்.
உங்களிடம் கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்.

சனி, நவம்பர் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நல்நுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர். (906)

பொருள்: தம் மனையாள் வேண்டியவாறு நடப்பவர்கள் தம் நண்பர்களின் குறைகளைத் தீர்க்க மாட்டார்கள்; தான தர்மங்களையும் செய்ய மாட்டார்கள்.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

அனுபவத்தை விடச் சிறந்த ஆசிரியன் வேறில்லை. அனுபவம் என்பது பாடம் கற்கும்பொழுதே வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் கல்விமுறையாகும்.

வெள்ளி, நவம்பர் 08, 2013

பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு காலமானார்

பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு. ‘பைவ்ஸ்டார்’, ‘தூள்’, ‘சிவகாசி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘மாப்பிள்ளை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிட்டிபாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்தார்.

தற்போது அவர் மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முகப்பேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிட்டிபாபு உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றார்.


இதை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
நடிகர் சிட்டிபாபுவுக்கு 49 வயதாகிறது. ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி: மாலைமலர்

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்




பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. (907)

பொருள்: இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து நடக்கின்றவனது ஆண்மையைவிட நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே மேலானது.


இன்றைய சிந்தனைக்கு


அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம் நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

வியாழன், நவம்பர் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். (906)

பொருள்: தன் மனைவியின் மூங்கில் போன்ற தோள்களுக்கு அஞ்சுபவர் தேவரைப் போல் சிறந்த வாழ்க்கை வாழ்க்கை வாழ்பவராக இருந்தாலும் ஆண்மை இல்லாதவர்.


இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இன்பம் புலன்களால் மட்டுமே உணரக் கூடியதல்ல. மனத்தால் உணர்ந்து அனுபவிக்க வேண்டியதும் ஆகும். உன்னால் எதைச் செய்ய முடியாது என்று சொல்கிறார்களோ அதைச் செய்து காட்டுவதுதான் இன்பம்.

புதன், நவம்பர் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். (905)

பொருள்: தன் மனைவிக்கு அஞ்சி வாழ்பவன் எப்போதும் நல்லவர்க்கு நல்ல செயல் செய்வதற்கு அஞ்சுவான்.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்

கீதையின் புகழ் 

நில மகளே கேள்!
எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு விரைவாக அமைதியும், நட்பும் உருவாகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ, ஓதப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ, அடுத்தவர் வாசிக்கும் தருணத்தில் காதால் கேட்கப்படுகிறதோ அங்கு நிச்சயமாக நான் வாசம் செய்கிறேன்(வசிக்கிறேன்).

செவ்வாய், நவம்பர் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


மனையாளை அஞ்சும் மறுமைஇ லாளன் 
வினையாண்மை வீறுஎய்தல் இன்று. (904)

பொருள்: தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற(வாழ்கின்ற) மறுமைப் பயன் இல்லாதவனுக்குச் செயலாற்றும் தன்மை சிறப்பாக இராது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இறைவனால் கொடுக்கப் பட்டதை மனிதனால் தடுக்க முடியாது. இறைவனால் தடுக்கப்பட்டதை மனிதனால் கொடுக்க முடியாது. ஆகவே எல்லாம் இறைவன் செயல். 

திங்கள், நவம்பர் 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். (903)

பொருள்: மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை, நல்லோரிடை செல்லும் காலம் தவிர்ந்த மற்றைய காலம் முழுதும் நாணத்தையே தரும்.