வெள்ளி, மார்ச் 22, 2013

நீங்கள் 30 வயதை கடந்தவரா? அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறீர்களா? இதை அவசியம் படியுங்கள்...

வீட்டிற்கு வீடு சர்க்கரை நோய் இருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் 30 கோடிபேருக்கு இந்நோய் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இன்று 25 வயது, 30 வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகின்றனர்.

இதற்கான காரணங்கள் குறித்து, மதுரை சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் சங்குமணி கூறியதாவது : குடும்பத்தினரில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை தடுக்க முடியும். அதிக உடல் எடை, உழைப்பின்மை, ரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு சத்து, கர்ப்ப கால சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பு, சினைப்பை சம்பந்தப்பட்ட நோய், தொப்பை வயிறு ஆகியவற்றால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 4 கி.மீ., வரை "வாக்கிங்' செல்ல வேண்டும். இதனால் ரத்தஅழுத்தம் சீராகிறது. ரத்தகொழுப்பு சத்து குறைகிறது. இதய ரத்தநாளங்கள் மற்றும் கால், கை ரத்தநாளங்கள் விரிவடைகின்றன. உடல் எடை குறைகிறது. மூளைக்கு செல்லும் ரத்தஓட்டத்தை அதிகரிக்கிறது.

"வாக்கிங்' செல்லும்போது கவனிக்க வேண்டியவை: சரியான ஷூ அல்லது செருப்பு அணிதல், தனது வயது ஒத்த ஒருவருடன் செல்வது, சிறிது சிறிதாக "வாக்கிங்' நேரத்தை அதிகரிப்பது உடலுக்கு நல்லது. உடல்நலம் இல்லாதபோது உடற்பயிற்சி செய்யக்கூடாது. உடல் பருமன் உள்ளவர்கள் 10 சதவீத எடையை குறைக்கும்போது, சர்க்கரை நோய் வருவதற்குரிய வாய்ப்பு 60 சதவீதமாக குறைகிறது. முதற்கட்டமாக, உடற்பயிற்சி செய்யும்போது 5லிருந்து 10 நிமிடம் மெதுவாக நடந்து உடல் உறுப்புகளை பயிற்சி செய்ய தயார்படுத்த வேண்டும். இதற்கு "வார்ம்-அப் பிரீயட்' என்பர். இரண்டாம் கட்ட உடற்பயிற்சியில், 30 நிமிடம் மித வேகம் அல்லது அதிக வேகத்துடன் நடக்கலாம்; சைக்கிள் ஓட்டலாம், நீச்சல் பயிற்சி செய்யலாம். மூன்றாம் கட்டத்தில், 10 நிமிடம் மெதுவான பயிற்சி செய்யும்போது நாடித்துடிப்பு சீராகிறது. இதை "கூல்டவுண் பிரீயட்' என்பர்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்: நார்ச்சத்து அதிகமுள்ள கீரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த காய்கறி மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்கவும். காலை உணவை தவிர்த்துவிட்டு, மதிய உணவை அளவுக்கு அதிகமாக எடுத்தாலோ, மதிய உணவை தவிர்த்துவிட்டு இரவு உணவை அதிகமாக எடுத்தாலோ சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகம்.
தொப்பைக்கு தேவை "குட்பை'  தொப்பை பல நோய்களுக்கு காரணமாகிறது. அதில் உள்ள கொழுப்பு செல்கள், சுரக்கும் ஹார்மோன்கள் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மது, சிகரெட்டை நிறுத்த வேண்டும். இவை இன்சுலின் சுரப்பை குறைப்பதுடன் அதன் செயல்திறனையும் குறைத்துவிடுகிறது. ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் நிச்சயமாக நிறுத்திவிட வேண்டும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கோபப்படுதலை குறைத்து யோகா பயிற்சி செய்தால் சர்க்கரை நோயை தடுக்கலாம். வடை, சோமாஸ், காரா சேவு, மிக்சர் போன்ற உணவுகளில் அதிக கொழுப்புச்சத்தும், கலோரியும் உள்ளது. இந்த உணவுகளை குறைப்பதன்மூலம் சர்க்கரை நோயை தடுக்கலாம். வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம். அப்பார்ட்மென்ட் என்றால், "லிப்ட்'டிற்கு பதில், மாடி படிகள் வழியாக செல்லலாம்.  இவ்வாறு கூறினார்.
நன்றி:  இருவர்உள்ளம் 

2 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

தேவையான, நல்ல கருத்துள்ள, சரியான சமயத்தில் எழுதியுள்ள பதிவு. மனமாரப் பாராட்டுகிறேன்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

Payanulla pakirvu pakirvukku nanri thodara vaazhththukkal

கருத்துரையிடுக