சனி, மார்ச் 17, 2012

தாரமும் குருவும் - பகுதி 6.7

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 6.7
இவ்வாறு 'முன்னெச்சரிக்கையுடன்' உதவும் மனப்பானமையுடன் செயல்படும் ஆசிரியர்களை இலங்கையில் மிகவும் அரிதாகவே கண்டேன். மேற்படி செயல் என் மனதில் 'கமலினி டீச்சருக்கென்று' மிகப்பெரிய இடத்தை ஒதுக்கி விட்டது. அவரைப் போன்ற உதவும் மனப்பான்மை உள்ள ஒரு ஆசிரியையை 32 ஆண்டுகள் கழித்து கடந்த 2009 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டில் கண்டேன். ஆனால் அவர் ஒரு டேனிஷ் பெண்மணி(வெள்ளைக் காரி) 32 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு வெள்ளைக்காரி போல சிந்தித்த எங்கள் கமலினி டீச்சர் எங்கிருந்தாலும் வாழ்க! 
இலங்கையில் பாடசாலைகளில் படித்த காலங்களில் வகுப்பு ஆசிரியர், ஆசிரியை, அதிபர்(தலைமை ஆசிரியர்) போன்ற பாத்திரங்களுக்கு அடுத்த படியாக நீங்களும் நானும் மறக்காத ஒரு பாத்திரம் என்று ஒன்று உண்டென்றால் அது மொனிட்டர்(Monitor) என்ற கதாபாத்திரமாகத்தான் இருக்கும். ஏனெனில் அந்த 'மொனிட்டர்' என்ற பாத்திரம் பள்ளி வாழ்கையின் தவிர்க்க முடியாத, முக்கியமான பாத்திரம் அல்லவா? இந்த மொனிட்டர் பதவியை தமிழகப் பள்ளிகளில் கிளாஸ் லீடர்(Class Leader) என்று அழைப்பார்கள். முற்காலத்தில் இந்தப் பதவியை??? தமிழில் 'சட்டாம்பிள்ளை' என்று அழைத்தார்களாம். நான் கூறுவது தவறாக இருக்கும் பட்சத்தில் பெரியோர்கள் என்னை மன்னிக்கவும். இவர்களின் பணி என்னென்ன என்பதை நான் கூறி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. வகுப்பிற்கு வெண்கட்டி(Chalk Piece) எடுத்து வருவது, துடைப்பான்/அழிப்பான்(Duster) எடுத்து வருவது,பிள்ளைகளுக்கு ஆசிரியர் அடிப்பதற்கு உதவியாக அலுவலகத்திற்குச் சென்று 'பிரம்பு' எடுத்து வருவது(கிராமப் புறப் பள்ளியாயின் 'பூவரசு மரத்தில்' ஏறி,  'தடி'(குச்சி) முறித்து வந்து ஆசிரியரிடம் கொடுப்பது. ஆசிரியருக்கு வரவுப் பதிவேடு(Attendance register) எடுத்துக் கொடுப்பது, இலங்கையில் கிராமப் புறப் பாடசாலைகளாயின் அங்கு ஆசிரியருக்குக் குடிப்பதற்கு செம்பில் தண்ணீர் எடுத்து வருவது என்று 'மகா கனம்' பொருந்திய மொனிட்டரின் பணிகள் நீண்டு செல்லும். இந்தப் பணிகளோடு முக்கியமாக 'வாத்தியாரிடம்/டீச்சரிடம் ஏனைய மாணவர்களைப் பற்றிக் 'கோள் மூட்டுவது'(போட்டுக் குடுக்கிறது/வத்தி வைக்கிறது) என்பதையும் சேர்க்க வேண்டும் என்பது கனடாவில் வாழும் எனது நண்பன் ஸ்ரீ என்ற தர்ம குலசிங்கத்தின் ஆசையாகும். இந்தப் பதவியினால் மாணவனுக்கோ,மாணவிக்கோ எந்தவித நன்மையையும் கிடையாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருதினாலும் இந்தப் பதவியை இலங்கையில் மட்டுமன்றி, தமிழ் நாட்டிலும் பல பெற்றோர்கள், மாணவர்கள் ஒரு 'கௌரவத்தின் சின்னமாக' கருதுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
மேற்படி 'மொனிட்டர்' பதவியைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் நிலவினாலும், உளவியலாளர்களின் கருத்துப்படி இந்தப் பதவி மாணவனின்/மாணவியின் மனதில் 'தன்னம்பிக்கை' விருட்சத்தின் விதையை சிறு வயதிலேயே விதைக்கிறது. மாணவனிடத்தில் தலைமைத்துவப் பண்பை வளர்க்கிறது, ஆளுமையை விருத்தி செய்கிறது, உளவியல் கட்டுமானத்தை உறுதி செய்கிறது என நீண்டு செல்கிறது பட்டியல். ஆனால் "பிள்ளை வாத்தியாருக்கு/டீச்சருக்கு உதவி செய்யிறதுக்காக அங்கையும், இங்கையும் ஓடித் திரியிறதால பிள்ளையின்ர படிப்புத்தான் கெடுகுது" என்று குறைபட்டுக் கொள்ளும் பல பெற்றோர்களையும் நான் கண்டிருக்கிறேன்.
இலங்கையில் நான் படித்த மூன்று பாடசாலைகளையும் குறிப்பிடுவதாயின் முதல் வகுப்பு தொடக்கம் எட்டாம் வகுப்பு வரை படித்த அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாசாலையில்(நான் படித்த காலத்தில் 'வித்தியாசாலை' இப்போது 'வித்தியாலயாமாக' மாற்றப் பட்டுள்ளது) வகுப்பில் மொனிட்டராக வருவதானால் பின்வரும் தகுதிகள் அந்த மாணவனுக்கு/மாணவிக்கு இருக்க வேண்டும்.
1) பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டும்
அல்லது 
2) வகுப்பில் முதலாம் பிள்ளையாக அல்லது இரண்டாம் பிள்ளையாக வரும், படிப்பில் 'கெட்டிக்காரப் பிள்ளையாக' இருக்க வேண்டும்.
அல்லது 
3) அதே பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் மகனாக/மகளாக இருக்க வேண்டும். 
மேற்கூறிய தகுதிகளில் இரண்டாவது தகுதி மட்டும் என்னிடம் இருந்ததால் அல்லைப்பிட்டியில் நான் படித்த காலத்தில் பல தடவைகள் வகுப்பில் 'மொனிட்டராக' வர முடிந்தது. அவ்வாறு வகுப்பில் மொனிட்டராக பல தடவைகள் 'பதவி' வகித்த காலத்தில் என்னிடம் 'கர்வம்' ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
அதன் பின்னர் ஒன்பதாம் பத்தாம் வகுப்புகளை யாழ்ப்பணத்தில் உள்ள புனித சம்பத்திரிசியார் கல்லூரியில்(St.Patrick's College) கற்றேன்.இந்தக் கல்லூரியின் பெருமைகளைக் கூறுவதானால் மூன்று நான்கு அத்தியாயங்கள் எழுத வேண்டும். அந்த அளவு புகழ் வாய்ந்த கல்லூரி அது. இத்தகைய கல்லூரிகளில் கற்பதற்கு என் போன்ற ஏழைகளுக்கு தகுதியே கிடையாது. இருப்பினும் தனது அக்காவின் பிள்ளைகளில் ஒன்று உயர்ந்த தராதரம் கொண்ட, புகழ்வாய்ந்த பாடசாலையில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்காகப் பணம் செலவு செய்த என் தாய்மாமன். சிவ.பரிமளகாந்தன் என்பவரை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
நான் முன்பு கூறியது போல இந்தப் பாடசாலை ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கிலாந்து, மற்றும் இத்தாலியத் திருச் சபையினரால் உருவாக்கப் பட்டு 130 வருடங்களாக தனியார் பாடசாலையாக இயங்கியது. பின்னர் 1980 களில் "அரசாங்க உதவி பெறும் தனியார் பாடசாலையாக" மாற்றம் பெற்றது. நான் முதலில் படித்த அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாசாலையில் 1980 களில் ஒரு மாணவன்/மாணவி கல்வி கற்பதற்கு கைமாறாக பாடசாலையின் வசதியை உயர்த்தும் பொருட்டு நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை 2 ரூபாயை(இலங்கை ரூபாய்) பள்ளிக்குச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தின் பெயர் 'வசதிக் கட்டணம்'(Facilities Fees). ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் பள்ளியில் படித்தால், முதலிரு பிள்ளைகள் மட்டுமே வசதிக் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றாவது பிள்ளை கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இருப்பினும் மேற்படி இரண்டு பிள்ளைகளுக்கும் கூட கட்டணம் செலுத்த முடியாத வறுமையில் வாடிய பெற்றோர்களும் இருந்தனர். இத்தகைய பெற்றோர்களால் மேற்படி வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வாத்தியாரிடம், குறிப்பாகப் பாடசாலை அதிபரிடம் பல தடவைகள் 'பிரம்படி' வாங்க வேண்டிய சூழ்நிலையும் எமது கிராமத்தில் 1980 களில் நிலவியது என்பது மறக்க முடியாத சோகம்.
(இன்னும் சொல்வேன்)
உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.

*எனது இந்தத் தொடரைத் தமிழக வாசகர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் பல இலங்கைத் தமிழ்ச் சொற் பிரயோகங்களை இந்தியத் தமிழ் வார்த்தைகளாக அடைப்புக் குறிக்குள் தந்துள்ளேன். உரையாடல் மொழி 'இலங்கைத் தமிழ்' என்பதைத் தமிழக வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

1 கருத்து:

vinothiny pathmanathan dk சொன்னது…

உண்மைதான் தாசன். மொனிட்டர் ஆவதற்கு நீங்கள் குறிப்பிட்ட தகுதிகள் தான் நான் கற்ற காலங்களிலும் முக்கிய இடத்தினை பிடித்திருந்தன.
இந்த வாரத்தொடர் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் .

கருத்துரையிடுக