திங்கள், பிப்ரவரி 20, 2012

ஒரு பிரபலத்தின் மறைவு

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி சென்னையில் காலமானார். சமீபத்தில் ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுந்ததில் அவரது தண்டுவடத்தில் பலத்த அடிப்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு, அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையிலேயே காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 85. தன்னுடைய 6 வயதில் மேடை நாடகங்களில் நடித்த இவர் நடிப்பிற்கு பெயர் போன எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகையான இவர், கமல்ஹாசனின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.கமல்ஹாசனின் மாமியாராக 'மகாநதி' திரைப்படத்தில் நடித்து ரசிகர்களால் பேசப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றார். அவருக்கென அத் திரைப்படத்தில் ஒதுக்கப்பட்ட "பேய்களை நம்பாதே, பிஞ்சிலே வெம்பாதே" என்ற பாடல் இப்போதும் ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஏராளமான டி.வி சீரியல்களிலும் நடித்து வந்தார்.



நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால், கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாத இவர், தனது அண்ணன் பேத்திகளுடன் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வந்தார்.
 மறைந்த எஸ்.என்.லெட்சுமியின் உடலுக்கு ஏராளமான திரையுலக 
நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமரர் எஸ்.என்.லெட்சுமி அவர்களின் இறுதி சடங்கு, விருதுநகரில் உள்ள அவரது சொந்த ஊரான சென்னல்குடியில் நாளை (21.02.12) நடைபெற இருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் துணை நடிகையாகப் பல தசாப்தங்கள் நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்த சாதனையாளர் அமரர் எஸ்.என்.லட்சுமி அவர்களின் மறைவிற்கு அந்திமாலை இணையம் தனது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்தம் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிரியபீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk 

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Malar சொன்னது…

very sad. she is nice actor.

கருத்துரையிடுக