செவ்வாய், ஜனவரி 10, 2012

நாடுகாண் பயணம் - எகிப்து

நாட்டின் பெயர்:
எகிப்து (Egypt)


வேறு பெயர்கள்:
எகிப்து அராபியக் குடியரசு(Arab Republic of Egypt)


அமைவிடம்:
வடக்கு ஆபிரிக்கா 


எல்லைகள்:
வடக்கில் - மத்திய தரைக் கடல் 
வட கிழக்கில் - சர்ச்சைக்குரிய காஸா நிலப் பகுதி(கரை) மற்றும் இஸ்ரேல் 
கிழக்கில் - செங்கடல் 
தெற்கில் - சூடான் 
மேற்கில் - லிபியா 


தலைநகரம்:
கைரோ (Cairo)
*கய்ரோ என அழைப்போரும் உள்ளனர்


மொழி:
அராபிய மொழி 


பாடசாலைகளில் கற்பிக்கப்படும் ஏனைய மொழிகள்:
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மற்றும் ஒரு சில பகுதிகளில் இத்தாலிய மொழி.


சமயங்கள்:
இஸ்லாம்(நாட்டு மக்களில் 90% மானோர் முஸ்லீம்கள் எனக் கருதப் படுகிறது), கிறீஸ்தவம், யூத சமயம்.
அரசினால் அங்கீகரிக்கப் படாத சிறுபான்மைச் சமயமாக 'பஹாய்' சமயம் உள்ளது.


கல்வியறிவு:
71% (ஆபிரிக்கக் கண்டத்தில் கல்வியறிவு உயர்வான நாடுகளில் ஒன்று) 


ஆயுட்காலம்:
ஆண்கள் 70 வருடங்கள் 
பெண்கள் 75 வருடங்கள் 


அரசாங்க முறை:
பாராளுமன்ற முறையுடன் கூடிய இராணுவ ஆட்சி 


ஆயுதப் படைகளின் தலைவர்:
முகமத் ஹுசெய்ன் தண்டவி(Mohamed Hussein Tantawi)*இது 10.01.2012 அன்று உள்ள நிலவரமாகும்.


பிரதமர்:
கமால் கன்சௌரி(Kamal Ganzouri) *இது 10.01.2012 அன்று உள்ள நிலவரமாகும்.


ஐக்கிய இராச்சியத்திடமிருந்து(பெரிய பிரித்தானியா) விடுதலை:
28.04.1922


பரப்பளவு:
1,002,450 சதுர கிலோ மீட்டர்கள்
*உலகில் 30 ஆவது பெரிய நாடு 


சனத்தொகை:
81,015,887 (2011 மதிப்பீடு)
*சனத்தொகை அடிப்படையில் உலகில் 16 ஆவது பெரிய நாடு.


நாணயம்:

எகிப்திய பவுண்ட்(Egyptian Pound / EGP)


இணையத் தளக் குறியீடு:
.eg


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 20


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
20%


வேலையில்லாத் திண்டாட்டம்:
25%


விவசாய உற்பத்திகள்:
சோளம், அரிசி, பருத்தி, கோதுமை, அவரை வகைகள், பழங்கள், காய்கறிகள், கால்நடைகள்(எருமைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், ஒட்டகங்கள்)


வருமானம் தரும் தொழில்கள், தொழிற்சாலை உற்பத்திகள்:
துணி, உணவு பதனிடல், சுற்றுலாத்துறை, இரசாயனப் பொருட்கள் உற்பத்தி, மருந்து வகைகள், ஐதரோ கார்பன்கள், சீமெந்து, வெளி நாடுகளுக்குக் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், உலோகங்கள், சிறு தொழில் உற்பத்திகள்.


ஏற்றுமதிகள்:
மசகு எண்ணெய்(கச்சா எண்ணெய்), பெட்ரோலியப் பொருட்கள், பருத்திப் பஞ்சு, துணிவகை, உலோகப் பொருட்கள், இரசாயனங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • எகிப்து எனும் பெயரைக் கேட்டவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது 'பிரமிட்டுகள்' ஆகும். ஆனால் உலகின் தொன்மையான நான்கு நாகரீகங்களில் ஒன்றாகிய 'நைல் நதி நாகரீகத்தையும்' உலகின் நீளமான நதியாகிய நைல் நதியையும்உலகிற்குத் தந்தது எகிப்து நாடு என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம்.
  • ஆபிரிக்க நாடுகளில் பசுமைக்கு உயிர் கொடுக்கும் நைல் நதியானது எகிப்து நாட்டிலேயே பிறப்பெடுக்கிறது. உலகின் ஆதி மனிதர்கள் நைல் நதிக் கரையில் வாழ்ந்து வந்ததாகவும், நைல் நதி நாகரீகம் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் கருதப்படுகிறது.
  • உலகில் பல நாடுகளில் பிரமிட்டுகள் இருந்தாலும், அவற்றால் புகழ் அடைந்ததும், அதன் மூலம் பல லட்சம் உல்லாசப் பயணிகளை வருடம் தோறும் உள்வாங்கிக் கொள்வது மட்டுமன்றி 'உலகின் ஏழு அதிசயங்களில்' ஒன்றாகக் குறிப்பிடப் படுவது எகிப்திலுள்ள பிரமிட்டுகள் ஆகும்.இந்நாட்டில் மொத்தம் 135 பிரமிட்டுகள் உள்ளன. இவை கி.மு.3000 ஆண்டளவில் கட்டப் பட்டவை என நம்பப் படுகிறது. ஒவ்வொரு பிரமிட்டும் 13 லட்சம் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அமைக்கப் பட்டவை. ஆதி மனிதனின் அசாத்தியத் திறமைக்கு எடுத்துக் காட்டாக இவை திகழ்கின்றன.
  • உலகப் பேரழகியாகிய(கறுப்பு இனப் பேரழகி) 'கிளியோபத்ரா(Cleopatra VII) எகிப்து நாட்டின் அரசியே ஆவார். 
  • ஆபிரிக்காவின் பல நாடுகளை வரட்சியில் வாட்டிக் கொண்டிருக்கும் உலகின் மிகப் பெரிய பாலைவனமாகிய 'சகாராப் பாலைவனம்' இந்நாட்டின் தெற்குப் பகுதியில் இருந்தே ஆரம்பிக்கிறது.
  • நைல் நதி நீர் வளத்தின் விவசாயத்தின் மூலமும், பெற்றோலிய ஏற்றுமதியின் மூலமும் மிகப் பெரும் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்து வரும் எகிப்து நாட்டில் சராசரிக் குடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
  • ஆபிரிக்க நாடுகளில் அகதிகளால் நிரம்பி வழியும் நாடுகளில் எகிப்தும் ஒன்று.இந்நாட்டில் அண்மைக் காலக் கணக்கெடுப்பின்படி 80000 மேற்பட்ட ஈராக்கிய அகதிகளும், 70000 மேற்பட்ட பாலஸ்தீன அகதிகளும், 15000 வரையான சூடான் அகதிகளும் வாழ்வதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • உலகில் மிகப் பெரிய நாடுகளுள் ஒன்றாக இருந்த போதும் சூடான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் எல்லைப் பிரச்சினையையும், சவூதி அரேபியாவுடன் தீவுகள் சம்பந்தமாகப் பிணக்கையும் கொண்டுள்ளது.
  • ஆபிரிக்க நாடுகளில் மருத்துவம், சுகாதாரம் ஆகிய விடயங்கள் பின் தங்கி இருப்பினும் எகிப்தில் 1000 நோயாளிகளுக்கு 3 மருத்துவர்கள் எனும் நிலை காணப் படுகிறது.
  • கப்பற் போக்குவரத்திற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட கடல் என வர்ணிக்கப் படும் 'சுயஸ் கால்வாய்' இந்நாட்டின் சிறப்புகளுள் ஒன்று.
  • உலகின் தொன்மையான கலங்கரை விளக்கங்களுள் ஒன்றாக வர்ணிக்கப்படும் 'அலெக்சாந்திரியா கலங்கரை விளக்கம்' இந்நாட்டின் சிறப்புக்களுள் ஒன்று.
  • 1981 ஆம் ஆண்டு தொடக்கம் ஜனநாயகத்திற்கு முரண்பாடாக 2011 ஆம் ஆண்டு வரை முப்பது ஆண்டுகள் எகிப்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் (28.02.2011) ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப் பட்டமையும், மக்கள் புரட்சியின் ஊடாக இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியமையும் வாசகர்கள் அறிந்ததே. இது சம்பந்தமாக அந்திமாலையில் கடந்த ஆண்டு வெளியாகிய சிறிய செய்திக் குறிப்பு கீழே இணைக்கப் பட்டுள்ளது. அதனை வாசிப்பதற்கு இங்கே அழுத்துக:- எகிப்தில் புதிய யுகம் ஆரம்பம்
  • கடந்த மாதத்தில்(டிசம்பர் 2011) எகிப்தில் தேர்தல்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட ஒரு பெண்ணைப் படை வீரர்கள் நடு வீதியில் வைத்து அடித்து, உதைத்து, அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றமை உலக ஊடகங்கள் அனைத்திலும் முக்கிய இடத்தைப் பிடித்ததோடு, அரபு உலகில் பலத்த உணர்வலைகளை ஏற்படுத்தியமை நீங்கள் அறிந்ததே. 

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

''...உலகில் 30 ஆவது பெரிய நாடு ...''
congratz....

கருத்துரையிடுக