செவ்வாய், டிசம்பர் 20, 2011

நாடுகாண் பயணம் - கிறிஸ்துமஸ் தீவு



தீவின் பெயர்:
கிறிஸ்துமஸ் தீவு (Christmas Island)


வேறு பெயர்கள்:
கிறிஸ்துமஸ் தீவு ஆட்சிப்பகுதி(The Territory of Christmas Island)


ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருக்கும் நாடு:
அவுஸ்திரேலியா 


எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் இந்து சமுத்திரம். இருப்பினும் வடக்கில் 500 கிலோ மீட்டர்கள் தொலைவில் இந்தோனேசியத் தலைநகரமாகிய ஜகார்த்தாவும்(Jakarta), தென் கிழக்கில் 2600 கிலோ மீட்டர்கள் தொலைவில் அவுஸ்திரேலியாவின் பெர்த்(Perth) நகரமும், வடக்கில் 975 கிலோ மீட்டர்கள் தொலைவில் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 'கொக்கோஸ் கீலிங்' தீவுகளும் உள்ளன. 


தலைநகரம்:
பிளையிங் பிஷ் கோவ் (Flying Fish Cove)


அலுவலக மொழி:
ஆங்கிலம்


ஏனைய மொழிகள்:
சீன மொழி, மலாய் மொழி.


சமயங்கள்:
புத்த சமயம் 36%
இஸ்லாம் 25%
கிறீஸ்தவம் 18%
ஏனையோர் 21%


இனங்கள்:
சீனர்கள் 70%
ஐரோப்பியர்கள் 20%
மலாய் இனத்தவர் 10%


ஆட்சிமுறை:
சம்பிரதாய பூர்வமான அரசியின் ஆட்சிக்குட்பட்ட கூட்டாட்சி அரசாங்கம்.


சம்பிரதாயபூர்வமாக நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத் (இங்கிலாந்து அரசி)


மேதகு ஆளுநர்:
குயின்ரின் புரூஸ் (Quentin Bryce) *இது 20.12.2011 அன்று உள்ள நிலவரமாகும். 


நிர்வாகி:
பிரையான் லேசி (Brian Lacy) *இது 20.12.2011 அன்று உள்ள நிலவரமாகும். 


உள்ளூராட்சித் தலைவர்:
கோர்டன் தொம்சன் (Gordon Thomson) *இது 20.12.2011 அன்று உள்ள நிலவரமாகும். 


சிங்கப்பூரிடம் இருந்து அவுஸ்திரேலியாவிடம் இறைமை(ஆட்சியதிகாரம்) ஒப்படைக்கப் பட்ட ஆண்டு:
1957


பரப்பளவு:
135 சதுர கிலோ மீட்டர்கள் 


சனத்தொகை:
1,402 (2009 மதிப்பீடு)


நாணயம்:
அவுஸ்திரேலிய டாலர்(AUD)


இணையத் தளக் குறியீடு:
.cx


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 61
*அவுஸ்திரேலியாவின் ஆளுகைக்குள் இருப்பதால் அவுஸ்திரேலியாவின் சர்வதேசத் தொலைபேசிக் குறியீடே இத் தீவிற்கும் பொருந்தும்.


வருமானம் தரும் தொழில்கள்:
சுற்றுலா, பொஸ்பேட் ஏற்றுமதி.


ஏற்றுமதிகள்:
பொஸ்பேட் 


தீவைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • இத்தீவில் ஆயிரக் கணக்கான இராட்சத நண்டுகள் வாழ்வதாக மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.இவை மனிதருக்கு ஊறு விளைவிக்கக் கூடியவை. மேற்படி நண்டுகள் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் வல்லமை கொண்டவை என்பதுடன், வீதிகளில் கூட்டமாகச் சென்று போக்குவரத்தை தடை செய்யும் ஆற்றல் மிக்கவை.
  • 1663 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த கப்டன் வில்லியம் மைனர்ஸ் என்பவர் பிரித்தானியக் கடற்படைக்குச் சொந்தமான 'ரோயல் மேரி' என்ற கப்பலில் இந்துமாப் பெருங் கடலில் சென்றுகொண்டிருக்கும் போது கிறிஸ்துமஸ் தினத்தன்று இத் தீவைக் கண்டு பிடித்ததால் இத் தீவுக்கு 'கிறிஸ்துமஸ் தீவு' எனப் பெயர் சூட்டப் பட்டது.
  • 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தீவில் மனிதக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப் பட்டன.
  • இத் தீவில் 'பொஸ்பேட்' என்ற இரசாயனம் அதிக அளவில் கிடைப்பதை அறிந்த பிரித்தானியப் பேரரசு பொஸ்பேட் சுரங்கங்களில் வேலை செய்யவதற்காக சீனா, மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தொழிலாளர்களைக் குடியேற்றியது.
  • இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஜப்பான் இத்தீவைக் கைப்பற்றியது. 
  • நண்டுகள், பறவைகள், மிருகங்கள் போன்றவற்றின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நாட்டு அரசு இத்தீவின் 2/3 பகுதியை தேசியப் பூங்காவாக அறிவித்துள்ளது.
  • ஒவ்வொரு வருடமும் அவுஸ்திரேலியாவை நோக்கி வரும், இந்தோனேசியா, இலங்கை மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் படகுகள், கப்பல்கள் இத் தீவிற்கு அருகில் வைத்தே அவுஸ்திரேலியக் கடற் படையினரால் கைப்பற்றப் படுகிறது என்பதையும், அகதிகள் கைது செய்யப் படுகின்றனர் என்பதையும் உங்களில் சிலர் அறிவீர்கள். இத்தீவிற்கு அருகில் வைத்துக் கைது செய்யப்படும் அகதிகள் முதலில் கிறிஸ்துமஸ் தீவில் தங்க வைக்கப் பட்டு விசாரிக்கப் பட்டு தகுதியானவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசியல் தஞ்சம் வழங்குகிறது.
  • இத்தீவிற்கு அருகிலேயே அகதிகளை ஏற்றி வரும் படகுகள் கடலில் மூழ்குவதால் இன்றுவரை நூற்றுக் கணக்கான அகதிகள் இறந்து போயுள்ளனர்.
  • அவுஸ்திரேலியாவிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும் அவுஸ்திரேலியாவின் வானொலி, தொலைக்காட்சிச் சேவையையும், இந்தோனேசியாவின் வானொலி, தொலைக்காட்சிச் சேவையையும் இத் தீவில் வாழ்வோர் பயன்படுத்தும் வசதி உள்ளது.
  • ஆரம்பப் பள்ளிகள் இயங்குகின்றன. இத் தீவிற்கென ஒரு நூலகம் உள்ளது. உயர் கல்வி கற்க விரும்புவோர் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டும்.
  • தீவு சிறியதாக இருந்தாலும் 18 கிலோமீட்டர் நீளமான புகையிரதப் பாதையும், புகையிரத சேவையும் இயங்குகின்றன. 
  • தீவில் ஒரு விமான நிலையம் உள்ளது அவுஸ்திரேலியாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் வாரத்தில் மூன்று தடவைகள் விமானங்கள் வந்து செல்கின்றன. 
  • இத் தீவின் பாதுகாப்புப் பொறுப்பு அவுஸ்திரேலியாவைச் சார்ந்தது.

3 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

நல்ல தகவல். இத்துடன் அங்கு வாழும் மக்களின் பிரதான தொழில்,உணவுப் பழக்கங்கள் ,வாழ்க்கை முறைகள் பற்றிய குறிப்புக்களையும் முடிந்தளவு இணைத்திருந்தால் நன்றாக இருக்கும். ?

ஆசிரியர், அந்திமாலை. சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி. மேற்படி ஆக்கத்திற்குத் தகவலை சேகரிக்கும்போது எப்படிப்பட்ட தகவல்களை சுருக்கமாக கொடுக்க முடியுமோ அவற்றையே தேர்வு செய்கிறோம். நீங்கள் கேட்டவற்றில் மக்களின் தொழில் எனும் விடயம் ஏற்கனவே கொடுத்துள்ளோம். உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவைகள் மிகவும் வினோதமானதாக இருந்தால் நிச்சயமாக அவற்றையும் சேர்த்துக் கொள்வோம். நாம் தகவல் பெறுகின்ற இணையங்களில் பெரிய நாடுகளைப் பற்றியே அதிக தகவல்கள் உள்ளன. ஒரு நாட்டைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தகவலை எழுதினால் வாசகர்களுக்குச் சலிப்புத் தட்டி விடும் அபாயமும் உண்டல்லவா? இங்கு நாம் குறிப்பிடுவது வாழ்க்கையோடு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பகுதியான வாசகர்களை.
ஆக்கத்தை வாசித்து விட்டு கருத்து எதுவும் எழுதாத வாசகர்களை விடவும் உங்கள் பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம்.

vetha.Elangathilakam. சொன்னது…

தமிழரிடம் மிகவும் பேர் போன கிறிஸ்துமஸ் தீவு விபரங்களுக்கு நன்றி.

கருத்துரையிடுக