சனி, டிசம்பர் 03, 2011

தாரமும் குருவும் பகுதி - 5.4

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்
பகுதி 5.4
அல்லைப்பிட்டி 1977
இவ்வாறு 1970 கள் வரையில் செழிப்போடு திகழ்ந்த இவ்விரு கிராமங்களின் மக்களுக்கும் 'மணல் திருடர்களின்' வருகையுடனும் 'மணல் வியாபாரத்துடனும்' கெட்ட காலம் ஆரம்பித்தது. அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமங்களின் மணல் வளத்தை மாற்றான் அகழ்ந்து செல்ல, கிராமத்தின் கிணறுகளில் நீர்வளம் குன்றி, மெல்ல, மெல்ல ஒவ்வொரு கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆரம்பித்தது.
முதலில் ஒவ்வொரு கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆரம்பித்தபோது மக்கள் இது இயற்கையின் 'திருவிளையாடல்' என்றே நினைத்துக் கொண்டனர். ஒரு சில மேதாவிகள் "கடற்கரையை அண்டி இருக்கும் தீவுகளில், கிராமங்களில் கிணற்று நீர் உப்பு நீராக மாறுவது தவிர்க்க முடியாதது" என்று புதியதொரு 'கருத்தை' மக்கள் மத்தியில் விதைத்தனர். கிணற்று நீர் உப்பு நீராகவோ, உவர் நீராகவோ மாறிய நிலத்திற்குச் சொந்தக் காரர்கள் தாம் கடவுளால் கைவிடப் பட்டதாகவும், தமது நிலம் பெறுமதியை இழந்து விட்டதாகவும் எண்ணி வருந்தினர். எதிர் வீட்டில் சென்று ஒரு தடவையேனும் ஒரு பொருளை இரவல் வாங்கிப் பழக்கமில்லாத நமக்கு தினமும் அவ்வீட்டில் சென்று 'குடி தண்ணீர்' அள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி வருந்தினர். இதை ஒரு 'தன்மானப் பிரச்சினையாக' எண்ணி மனதில் குமைந்து, கூனிக் குறுகிப் போனவர்களும் உண்டு. இன்னும் ஒரு பகுதியினர் தமது மனதளவில் எதிரியாக நினைத்துக் கொண்ட 'போட்டியாளரின்' நிலத்துக் கிணற்று நீர் 'உப்பு நீராக' மாறாத விந்தை கண்டு வியந்ததுடன், அக்கிணற்று நீர் எப்போது உவர் நீராக மாறும் என்று காத்திருந்து ஏமாந்தனர் என்பது நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். 
பொதுமக்களில் யாரும் இந்த விடயத்தை விபரீதமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது அக்காலத்து நிலைமையாக இருந்தது. ஒரு சில 'அறிவாளிகளுக்கு' மட்டும் மணல் வியாபாரத்தின் 'பக்க விளைவு இது என்பதும், மழைக் காலத்தில் கடல் நீர் வெள்ளத்தோடு சேர்ந்து கிராமத்திற்குள் நுழைகிறது என்பதும் தெரிந்திருந்தது. இருப்பினும் அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது போய் விட்டது. வெள்ளம் வந்தபின் அணை போட முடியுமா? 'ஒரு சில அறிவாளிகள்' என்று நான் குறிப்பிட்டதால் மேற்படி கிராமங்களில் அறிவாளிகளுக்குப் பற்றாக்குறை நிலவியது என்று நினைத்து விடாதீர்கள். மழைக்குக் கூடப் பள்ளிக்கூடத்திற்கு ஒதுங்காத, ஆனால் மிகவும் 'அறிவுள்ள' மனிதர்களும் இருந்தார்கள். பத்தாம்வகுப்பு வரை, பன்னிரண்டாம் வகுப்புவரை, பட்டப் படிப்பு வரை படித்த ஆனால் அறிவு கொஞ்சம் 'கம்மி' யான மனிதர்களும் இந்த ஊர்களில் வாழ்ந்தார்கள். எங்கள் கிராமமாகிய அல்லைப்பிட்டியில் 'பொன்னையா' என்று ஒரு கிழவர் வாழ்ந்தார். எனது பேர்த்தியார் தொடக்கம் எனது தாயார் வரை அவரைப் 'பொன்னையா அண்ணை' என்று அழைத்ததால் நானும் அவரைப் 'பொன்னையா அண்ணை' என்றே அழைத்தேன். அவர் படித்தது என்னவோ 'ஐந்தாம் வகுப்புத்தான்' ஆனால் நம்பினால் நம்புங்கள் அவருக்கு கிறிஸ்தோபர் கொலம்பஸ் தொடக்கம், அடொல்ப் ஹிட்லர் வரை தெரிந்திருந்தது மட்டுமல்ல ஒரு 50 நாடுகளின் தலைநகரங்களின் பெயரை கண்ணை மூடிக் கொண்டு கட கடவென்று கூறுவார். இலங்கையின் சரித்திரத்தை ஏறக்குறைய 'கரைத்துக் குடித்திருந்தார்', அது மட்டுமல்ல அப்பச் சோடாவில்(பேக்கிங் பவுடர்) என்ன இரசாயனம் உள்ளது என்பது தொடக்கம் நாம் குடிக்கும் சோடாவில்(குளிர் பானம்) என்ன வாயுவை அடைக்கிறார்கள் என்பது வரை தெரிந்து வைத்திருந்தார். அவரது அறிவுக் கூர்மையை கண்டு நான் வியந்து, 'வாய் பிளந்து' நின்றிருக்கிறேன். இதே ஊரில் ஒரு சில பட்டதாரிகளும் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவர் 'சிங்கப்பூர்' இலங்கையை விடப் பெரியதென்றும், அது ஜப்பானுக்கு அண்மையில் உள்ளதென்றும் பிதற்றித் திரிந்தார்.  
சரி, இவ்விரு கிராமங்களிலும் அறிவாளிகள் இருந்தும் அவர்கள் மேற்படி மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறியது ஏன் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஆனால் ஒவ்வொரு சட்ட விரோதக் காரியங்களும், சமூகத்திற்குத் தீங்கிழைக்கும் காரியங்களும் மிகப்பெரிய 'பண முதலைகளின்' ஆதரவுடன் அல்லது ஆசீர்வாதத்துடன் நடைபெறுவது வழமை என்பதும் நீங்கள் அறியாததல்ல. அவர்களை எதிர்க்கின்ற துணிச்சல் அறிவாளிகளுக்கு அவ்வளவு சுலபமாக வந்து விடுவதில்லையே. எதிர்த்தால் 'இருட்டடி'(இருட்டில் முகம் தெரியாத நபர்கள் வந்து தாக்குவதால் நமது நாட்டில் 'இருட்டடி' என்று பெயர் வைத்தார்கள்) வாங்க வேண்டி வரும். அல்லது 'வாள் வெட்டுக்கு' ஆளாக வேண்டி வரும். இதனால் போலும் அறிவாளிகள் "நமக்கேன் வம்பு" என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.
ஆனால் 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' செய்வது போல் அல்லைப்பிட்டி, மண்கும்பானின் மணல் வளம் சுமாராக 14 வருடங்கள் கொள்ளையடிக்கப் பட்டபின்னர் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும், கல்விமான்களும் கொஞ்சம் விழித்துக் கொண்டனர். இவர்கள் ஒன்று சேர்ந்து இம் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என 1984 இல் முடிவெடுத்தனர்.
இதன் முதலாவது கட்டமாக ஒரு 'கண்டன ஊர்வலம்' ஒன்று இவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக