புதன், நவம்பர் 02, 2011

தாரமும் குருவும் . பகுதி - 5.0

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
 அல்லைப்பிட்டி 1977
அல்லைப்பிட்டியிலிருந்து யாழ் நகரத்திற்கு 'மணல்' ஏற்றுமதி நடைபெற்றதைப் பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? அதைப் பற்றிச் சிறிது விளக்கமாக கூற விரும்புகிறேன். இலங்கையில் ஐந்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ஒரு கதை 1985 ஆம் ஆண்டுவரை இருந்தது. அக்கதை இப்போதும் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. அக்கதையின் தலைப்பு "இரு கிராமங்களைத் தின்ற ஆடு" என்பதாகும். அக்கதையை மறந்து போய் விட்டவர்களுக்காக சுருக்கமாகக் கூறுகிறேன்.
இரு கிராமங்களைத் தின்ற ஆடு 
மன்னர் காட்டிற்கு வேட்டையின் நிமித்தம் தனது பரிவாரங்களுடன் சென்றார். காட்டிற்குள் மிகவும் தொலைவு சென்று விட்டனர். அங்கே அவர்களுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தது. தண்ணீர் எங்காவது கிடைக்குமா? என்று தேடினர். எங்கும் தண்ணீர் தென்படவில்லை. காட்டிற்குள் ஒரு சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டு நின்றான். அவனது பெயர் 'பார்சு' அவனை அணுகி அவர்கள் தமது தாகத்திற்குத் தண்ணீர் கேட்டனர். அந்தச் சிறுவன் அவர்களிடம் மேற்படி காட்டுப் பகுதியில் எங்கும் தண்ணீர் கிடையாது என்பதைக் கூறினாலும், மன்னருடைய, படை வீரர்களுடைய 'தாகத்தைத்' தன்னால் தீர்க்க முடியும் என்று கூறியவனாக தனது ஆடுகளில் இருந்து 'ஆட்டுப்' பாலைக் கறந்து மன்னருக்கும், அவரது பரிவாரங்களுக்கும் கொடுத்தான். தமது இக்கட்டான நிலையில் தங்கள் தாகம் தீர்த்த 'பார்சுவுக்கு' ஏதாவது பரிசளிக்க விரும்பினார் மன்னர். அவரிடம் அவனுக்குப் பரிசளிக்கக் கூடிய வகையில் எதுவும் இருக்கவில்லை. உடனடியாக அருகிலிருந்த ஆலமரத்திலிருந்து ஒரு இலையைப் பிடுங்கிய மன்னர், தனது கையிலிருந்த ஊசியால் ஆல இலையின்மீது ஏதோ எழுதினார். எழுதிய மன்னர் பார்சுவை அழைத்து "பார்சு நீ எங்களின் தாகத்தைத் தீர்த்ததற்கு சன்மானமாக உனக்கு இரண்டு கிராமங்களைப் பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன். நீ இந்த ஆலிலையை எடுத்துக் கொண்டு நாளை அரண்மனைக்கு வா நான் உறுதியளித்தபடி என் அமைச்சர்கள் அந்தப் பரிசை உனக்கு வழங்குவார்கள்" என்று கூறினார்.
வீட்டிற்குச் சென்ற பார்சு 'அந்த இலையை' மிகவும் பத்திரமாகப் பாதுகாத்தான். அன்றிரவு உறங்கும்போது அந்த இலையை தனது தலையணைக்கு அடியில் வைத்தான். மறுநாட் காலையில் அவன் தூக்கத்தில் இருந்தபோது அவன் அருகே வந்த ஒரு 'நொண்டி ஆடு' தலையணையிலிருந்து வெளியே தெரிந்த அந்த ஆலிலையைத் தின்று விட்டது. தூக்கத்திலிருந்து எழுந்த பார்சு ஆலிலையை ஆடு தின்று விட்டதை அறிந்து அழுதான், அரற்றினான் "ஐயோ எனது இரண்டு கிராமங்களை ஆடு தின்று விட்டதே! எனது இரண்டு கிராமங்களை ஆடு தின்று விட்டதே! என்று கத்தினான். மக்கள் அவனுக்குப் 'பைத்தியம்' பிடித்து விட்டது என்று கருதி அவன்மீது தண்ணீரை ஊற்றினர், கல்லால் எறிந்தனர்.
பார்சு தெருத் தெருவாக இவ்வாறே புலம்பியபடி சென்றான். அரண்மனை வாசலிலும் நின்று அவ்வாறே புலம்பினான். அரண்மனை வாயில் காப்போரும் பார்சுவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்றே கருதினர். ஆனால் அவனது அலறலைக் கேட்ட மன்னருக்கு அவன் "என்ன கூறுகிறான்" என்று புரிந்தது. அவனை அழைத்து நடந்த சம்பவத்தை ஆதரவாகக் கேட்ட மன்னர், தான் உறுதியளித்தபடி பார்சுவுக்கு இரண்டு கிராமங்களைப் பரிசாக அளித்தார்.....
என்று முடியும் அந்தக் கதை. என் தொடரை ஆர்வமுடன் வாசித்து வரும் அன்பான வாசகப் பெருமக்களே! மேற்படி கதையை ஒத்த நிகழ்வு எங்கள் யாழ் மாவட்டத்தின் 'தீவகத்திலும்' நிகழ்ந்தது. இங்கு ஆடு கிராமங்களைத் தின்னவில்லை. மணல் வியாபாரிகள்(கொள்ளையர்கள்) எங்கள் இரண்டு கிராமங்களை 'விழுங்கினர்'.
எங்கள் கிராமமாகிய 'அல்லைப்பிட்டியும்' அயல் கிராமமாகிய 'மண்கும்பானும்' மணல் வியாபாரிகளால் விழுங்கப் பட்டது. 1970 களிலும் 1980 களிலும் இந்தத் துயரம் நிகழ்த்தப் பட்டது. தங்களது காணிகளில் இருந்து இவர்களுக்கு ஒரு சொற்ப தொகைக்கு ஆசைப்பட்டு தமது மணலை விற்ற காணி உரிமையாளர்களுக்கு அப்போது தெரியாது "ஒரு சொற்ப தொகைப் பணத்திற்கு ஆசைப்பட்டு, எமது கிராமத்தின் நிலவளம், நீர்வளம், எமது கிராமத்தின் பசுமையான எதிர்காலம் அனைத்தையும் இவர்களிடம் 'தாரை வார்க்கிறோம்' என்பது.
ஒவ்வொரு மணல் வியாபாரியும் போட்டி போட்டுக் கொண்டு மணலை ஏற்றிச் சென்றதால் அல்லைப்பிட்டி என்ற பெயருக்கு காரணமாக இருந்த 'மணல் பிட்டிகள்'(மேடுகள்) மெல்ல, மெல்ல மறைந்து போயின, மிகப்பெரிய பள்ளங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்தப் பள்ளமான பகுதிகளில் மழைநீர் மிகப்பெரிய 'நீர்த் தேக்கம் போல' தேங்க ஆரம்பித்தது. கடற்கரை ஓரமாக இருந்த நிலப் பகுதிகளிலும் ஏற்கனவே மணல் அகழப்பட்டு அங்கும் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருந்ததால் கடல் நீரும், மழை நீரும்(வெள்ளம்) ஒவ்வொரு வருட மழைக் காலத்திலும் கலக்க ஆரம்பித்தது. 1970 களின் தொடக்கத்தில் அல்லைப்பிட்டியின் கிணறுகளில் 100% நன்னீராக(குடிநீர்) இருந்த நிலை மாறி 1980 களின் தொடக்கத்தில் அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய கிராமங்களில் 60% மான கிணறுகளின் நீரானது 'உவர் நீராக'(உப்பு நீர்) மாறியது. இதைப் பற்றி கிராமத்தவர்கள் யாரும் அலட்டிக் கொள்ளவே இல்லை. வெள்ளம் வந்தபின் அணை கட்ட முடியுமா? யாராவது கிராமத்தைக் காக்க முன்வந்தாலும், எல்லாம் நடந்து முடிந்தபின் என்னதான் செய்ய முடியும்? 1990 ஆம் ஆண்டில் இவ்விரு கிராம மக்களும் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட காலத்தில் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமங்களில் உள்ள கிணறுகளில் 80% மானவை உவர் நீராக மாறியிருந்தது. மீதி 20% கிணறுகளே மனிதர்கள் தமது 'குடி நீர்த்' தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய தாக எஞ்சியிருந்தன.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

2 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

இந்த வார தாரமும் குருவும் இல் சின்ன வயதிலே கேட்ட ஒரு கதையை நினைவுபடுத்தியதட்கு நன்றி .ஒவ்வொரு கிராமங்களிலிலும் துயரம் நிறைந்த கதைகள் இருக்கத் தான் செய்கின்றன .உங்களின் இந்த ஆக்கத்தை வாசிக்க எனக்குக் கூட எங்கள் கிராமம் பற்றி ஒரு ஆக்கம் எழுத தோன்றுகிறது. நன்றாகவும் வாசிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் உள்ளது. பாராட்டுக்கள்

இ. சொ. லிங்கதாசன், டென்மார்க். சொன்னது…

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் தாராளமாக எழுதலாம். எழுத விரும்புபவர்களையும், வளர விரும்புபவர்களையும் ஊக்குவிப்பதே 'அந்திமாலையின்' முதலாவது கொள்கை.

கருத்துரையிடுக