திங்கள், செப்டம்பர் 19, 2011

தாய்லாந்துப் பயணம் - 19


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
பற்றயாவிலிருந்து வேகப்படகில் கோ லான் தீவுக்கு 7கி.மீ, 20 நிமிட பயணம். இதுவே 3 தீவிலும் பெரிதான தீவு.  தாய்லாந்துப் படத்தில் பற்றயா இருக்குமிடம் கடந்த அங்கத்தில் பார்த்தீர்கள்.  இங்கு பற்றயாவிற்கு அருகில் தீவுகளை கறுப்பு வட்டமிட்டு அம்புக் குறியிட்டுக் காட்டியுள்ளேன்.
25 மீட்டர் ஆழமான கடல். நீலமான கண்ணாடி போல தெட்டத் தெளிந்த நீராக இருந்தது. செருப்பைக் கையிலெடுத்துக் கொண்டு நீருக்குள் சிறிது தூரம் நடந்து செல்ல வசதியாக என் கட்டைப் பாவாடை இருந்தது.
வேகப் படகில் ஏறினோம்.
படு வேகமான படகின் ஓட்டம். வேகமான காற்று. படகை இறுகப் பிடித்தபடி மிக உல்லாசமாக இருந்தது.
போகும் போது நடுவில் நிறுத்தி  parasail, jetski, snorkel  ஆகியவை செய்ய விருப்பமா என்று கேட்டார்கள். இவைகளைத் தமிழ் படுத்த எனக்குத் தெரியவில்லை. அகராதியும் உதவவில்லை. தண்ணீருக்குள் ஏற்ற உடைகளோடு இறங்கி பவளப் பாறைகள் பார்த்து வருவது, நீரினுள் சறுக்கிக் கொண்டு போதல், ஆகாயத்தில் பறப்பது, ஆகியவை என்று நினைக்கிறேன். அதாவது இவைகளை மேலதிகமாக நாங்கள் பணம் செலுத்திச் செய்யலாம். எம்முடன் வந்த யாருக்குமே அவைகளில் ஆர்வம் இருக்கவில்லை.
இருபது நிமிடங்களில் நேராக கோலான் தீவில் போய் இறங்கினோம். 44சதுர மீட்டர் சுற்றளவு கொண்ட தனியார் தீவு. அதாவது பிறைவேட் தீவு. 3000 மக்கள் அங்கு வசிக்கிறார்களாம். குடிப்பதற்கு தண்ணீர் இல்லையாம்.
தீவில் போய் 11மணிக்கு இறங்கியதும் மொழி பெயர்ப்பாளப் பெண்மணி (கறுப்பு ஆடையுடன் speed boatல்   இருப்பவர்)  நீரின் எல்லைகளைக் காட்டி ‘இதற்கு அப்பால் போகாதீர்கள்’ என்று கட்டளைகளைக் கூறினாள்.
எல்லைகள் நீரில் வெள்ளையாகத் தெரிகிறது.
எமக்கு திறப்புகளுடன் அலுமாரிகள் எடுத்துத் தந்தாள். 12.45க்கு உணவு வரும். 5.00மணிக்கு இங்கிருந்து போகிறோம் எனக்கூறி சென்றுவிட்டாள்.
நாங்கள் நீச்சலாடை மாற்றித், தண்ணீருள் சென்று விளையாடினோம். மிக ஆனந்தமாக இருந்தது. பொல்லாத உப்புத் தண்ணீர். இளவட்டங்கள் தண்ணீர்ப் பந்து விளையாடினார்கள்.
அதையெல்லாம் பார்த்து ரசித்தோம். நீருள் நின்று ஆடி விரல்கள் சூம்பத் தொடங்க இனிப் போதும் என்று வெளியே வர மனமில்லாமல் வந்து ஆடை மாற்றினோம்.
பின்னர் உணவகத்தில் உணவு.
எங்கு போனாலும் எனக்கு சைவ உணவு முன்னரே பதிவு செய்து விடுவோம். அவ்வுணவில் போஞ்சியை மாவில் தோய்த்துப் பொரித்திருந்தனர். மிக சுவையாக இருந்தது. பழக்கலவை, சலாட் சோறு, பாண் என்று மிக அருமையான உணவாக இருந்தது.
கணவருக்கு கடல் உணவு.  நண்டு, றால் அது இதுவென்று. நல்ல ஒரு பிடி பிடித்தோம். கடைகளில் நினைவுப் பொருட்கள் விற்பனை என்று எல்லாம் யானை விலையாகவே இருந்தது. நமக்கு எதுவும் வாங்க வேண்டிய தேவையும் இருக்கவேயில்லை. அது தான் பாங்கொக்கில் கடை கடையாக ஏறி இறங்கினோமே!
தண்ணீர் விளையாட்டு, சூரியக் குளிப்பு, நீச்சல் தவிர வேறு ஏதுமே அங்கு இல்லை.
காடு சுற்றலாம் என் கணவர் அதை விரும்பவில்லை. ஆயினும் சிறு கடைகளைச் சுற்றிப் பார்க்க மாலை நேரமும் வந்தது.
போகும் போது வாழைப்பழ உருவமான படகில் முதலில் ஏறினோம். அதில் படகினூடாக கீழே தண்ணீரைப் பார்க்க முடியும் தண்ணீர் பளிங்குத் தெளிவானதால் பவளப் பாறைகளைப் பார்க்க முடியும். உள்ளே ஒரு அதிசய, அற்புத உலகம். மீன்கள் இன்னும் பல சீவராசிகள் கூட்டமாக ஓடுவது இன்னும் ஆழக்கடல் ஆழத்து அதிசய உலகைப் பார்த்திடவே அந்தப் படகில் ஏற்றினார்கள். உல்லாசப் பயணத்தில் அதுவும் ஒரு திட்டம். கீழே பாருங்கள் அதோ, இதோ என்று காட்டினார்கள். டிஸ்கவரி சனாலில் கடலின் கீழ் காட்சிகள் காட்டுவார்களே அது போல இருந்தது. அற்புதம்! அதிசயம்! பவளப் பாறைகளும் தெரிந்தது. மிக அழகாக இருந்தது. அதுவும் கோ குறொக், கோ சக் தீவுகளின் அருகில் இவை மிக, கண்ணாடித் துல்லியமாகத் தெரிந்தது.
கோ சக் தீவின் சுற்றுப் பரப்பு 0.05சதுர கிலோ மீட்டராகும். கோ லான் தீவிலிருந்து 600 மீட்டர் தூரத்தில் கோ சக் தீவு. இது குதிரையின் குளம்பு போன்ற உருவமான தீவு. இதில் நீருக்கு அடியிலே போய் பார்க்க முடியும். பணம் கட்டினால் நீருக்குள் இறங்கும் ஆடை, உபகரணங்கள் மாற்றிக் கொண்டு கீழே போய் வரலாம். இத்தீவைத் தாண்டியதும் வேகப் படகும் எமக்குக் கிட்ட வந்தது.
——– பயணம் தொடரும்.———

3 கருத்துகள்:

Vathana, DK சொன்னது…

Good

vinothiny pathmanathan dk சொன்னது…

nice

Vetha. Elangathilakam. சொன்னது…

Thank you for your vatikal.....Vathanana and vinothini. God bless you all.

கருத்துரையிடுக