புதன், ஜூன் 08, 2011

தாரமும் குருவும் பகுதி - 4.0

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 4.0


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
அடுத்த நாள் எனது 'அல்லைப்பிட்டியை' நோக்கிய பயணம் ஆரம்பமானது. நானும் என் தாயாரும் கையில் ஒரு சில பொருட்கள் சகிதம் அல்லைப்பிட்டியில் உள்ள என் அம்மம்மாவின்(பேர்த்தியாரின்) வீடு நோக்கி ஆழம் குறைந்த மண்டைதீவுப் 'பரவைக்கடல்' ஊடாக நடக்க ஆரம்பித்தோம். அல்லைப்பிட்டியில் சென்று வாழப் போவதை நினைத்துப் பயந்ததாக முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? என் பெற்றோர்களைப் பிரிந்து வாழப் போவதை நினைத்துதான் பயந்தேனே தவிர, எனது பேர்த்தியாரையோ, அல்லைப்பிட்டியிலுள்ள எங்கள் உறவினர்களை நினைத்தோ எனக்குப் பயமில்லை. அம்மம்மாவின் வீட்டில் எங்கள் தாத்தாவும்,(இவரை நாங்கள் 'அப்பையா' என்றுதான் அழைத்தோம், அழைக்கிறோம்.)  என்னைவிடவும் 12 வயது அதிகமான என் ஒரேயொரு தாய்மாமனும், என்னைவிடவும் ஆறு வயது அதிகமான, என் சித்திகளில்(அம்மாவின் கடைசித் தங்கை) ஒருவரும் வாழ்ந்து வந்தனர். அல்லைப்பிட்டியில் என் தந்தையின் உறவினர்களும், தாயின் உறவினர்களும் என ஒரு பத்து 'உறவுக் குடும்பங்களும்' வாழ்ந்து வந்தனர். என் தந்தையார் தனது சொந்த 'மைத்துனியாகிய(மச்சாள்) என் தாயாரைத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் மேற்படி குடும்பங்கள் என் பெற்றோரின் 'திருமணத்திற்கு' முன்னரே ஒருவருக்கொருவர் உறவினராவர்.
மேற்படி உறவினரின் வீடுகளுக்குச் செல்வதென்றால் எனக்கு மிகுந்த ஆனந்தம். காரணம் இவர்களில் பெரும்பாலானவர்களின் வீட்டில் எங்களிடம் இல்லாத 'எல்லாமே' இருந்தன.
மேற்படி குடும்பங்களில் சிலரைப் 'பணக்காரர்கள்' என்றும் சிலரை 'நடுத்தரக் குடும்பங்கள்' என்றும் வகைப்படுத்தலாம். அல்லைப்பிட்டியில் என் பேர்த்தியாரின் வீட்டிற்கு சென்று வாழ்ந்த காலத்திற்கு சில காலங்களுக்கு முன்னர் என் தாயுடன் இந்த உறவினர் வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குப் பல சுவையான தின்பண்டங்களும், 'பால் தேநீரும்' கிடைத்திருக்கின்றன. அப்போதெல்லாம் 'பால் தேநீர்' குடிப்பவர்கள் பணக்காரர்கள் என்கின்ற மனப்பான்மை என்னிடமிருந்தது உண்மை. எனக்கு வயது வந்தபின்னர் எங்கள் வீட்டிலும் பல தடவைகள் 'பால் தேநீர்' பருகியிருக்கிறோம், ஆனாலும் நாங்கள் பணக்காரர்கள் ஆகவேயில்லை.
எனது கையில் ஒரு சோடி உடுப்புக்கள் அடங்கிய ஒரு பையும், என் அம்மாவின் கையில், ஒரு பையில் கூப்பனுக்குக் கிடைக்கும் அரிசியும் சகிதம் அம்மம்மாவின் வீட்டில் நுழைந்தோம். எனது ஞாபக சக்தி சரியாக இருக்கும் பட்சத்தில் அது இலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான  சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதி. அக்காலத்தில் கூட்டுறவுச் சங்கக் கடையில் ஒரு வாரத்திற்கு 'காசு அரிசியும்' அடுத்து வரும் வாரத்தில் 'ஓசி அரிசியும்' வழங்கப்படுவது வழமை. இதில் எங்களைப் போன்ற 'ஏழைக் குடும்பங்கள்' காசு அரிசியை வாங்காது தவிர்த்து விட்டு, 'ஓசி அரிசியை' மட்டும் வாங்குவது வழமை. எனது கூற்று சரியா, தவறா என்பதை அக்காலத்தில் எங்களைப் போல் ஏழைகளாக இருந்த, ஒரு சிலரேனும் அறிவீர்கள்.
அம்மாவின் கையிலிருந்த பையில் நான் மேலே குறிப்பிட்ட 'ஓசி அரிசி' தாராளமாக இருந்தது. தன் பிள்ளையைத் தனது தாயின் வீட்டில் வளர்வதற்கு ஒப்படைக்கும்போதும், தனது சுய மதிப்பிற்கு குறைவு ஏற்படாத வகையில் உணவுக்கான ஒரு பங்களிப்பையாவது நல்கிய என் தாயின் தன்மான உணர்ச்சியையும், பொறுப்புணர்வையும் இப்போது நினைத்து வியந்து, மெய் சிலிர்க்கிறேன்.
என்னை என் பேர்த்தியாரின் வீட்டில் ஒப்படைக்கும் நிகழ்வு எவ்வித சிரமங்களும் இல்லாமல் இனிதே நிகழ்ந்தது. என்ன காரணமோ தெரியவில்லை என் பேர்த்தியாருக்கு தனது ஏனைய பேரப் பிள்ளைகளை விடவும் என்மீது பாசம் அதிகம். நான் சிறு குழந்தையாக இருந்த காலத்தில் மிகவும் அழகாக இருந்தேன் என்று கூறுகிறார்கள் அது காரணமா? அல்லது நானும் 'ஞான சம்பந்தரைப் போல்' மூன்று வயதிலேயே 'தேவாரம்' பாடினேனாம், அது காரணமா? அல்லது இவைகளுக்கு அப்பாற்பட்ட வேறொரு காரணமா என்பதை நானறியேன். இவ்வாறு தனது விருப்பத்துக்குரிய ஒரு பேரப்பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள என் பேர்த்தியார் தயங்குவாரா என்ன?
இப்போது நான் 'அல்லைப்பிட்டியின் பிரஜை' ஆகிவிட்டேன். ஆனாலும் எனக்குத் தெரியாது அந்தக் கிராமத்திற்தான் என் எதிர்காலமே நகர்ந்து செல்லப் போகிறது என்ற விடயம். சரி அல்லைப்பிட்டி என்ற புதிய தேசத்தில் குடிபுகுந்தாகி விட்டது. ஆனால் 'அல்லைப்பிட்டியைப்' பற்றி, அது எங்கிருக்கிறது என்பது பற்றி உங்களிடம் எதுவுமே கூறவில்லை அல்லவா?
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 
  

2 கருத்துகள்:

Sakthy, DK சொன்னது…

I love reading this story ... very interesting.

Nakarajah Denmark சொன்னது…

Super Story.

கருத்துரையிடுக