வியாழன், ஜூன் 30, 2011

வாழ்வியல் குறள் - 1

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க் 
1. பெற்றோர் உயர்ச்சி
லக உறவின் ஆரம்பச் சுருதி
உன்னதமான அம்மா, அப்பா.
ன்புப் பெற்றோர் அனுபவ மொழி
வென்றிடும் வாழ்விற்கு ஏணி.
தியற்று  மனிதன் அந்நியமாய்  பெற்றோரை
மதித்தால் அவன் அற்பன்.
பெற்றோர் மனமிசை வீற்றிருக்கும் பிள்ளை
குற்றப் பாதையை நாடான்.
வாழ்வுக் கோயிலின் மூல விக்கிரகங்கள்
தாழ்விலா வாழ்வுடைய பெற்றோர்.
ற்று உயர் பதவி வகித்தென்ன
பெற்றோரைப் பேணாதோன் கீழோன்.
யர்வு தாழ்வற்ற பெற்றோர் அன்பு
துயர்வற்ற படகுத் துடுப்பாகும்.
னிவுடை பெற்றோர் பிள்ளைகளிற்கு நல்ல
துணிவு தரும் தோழராகிறார்.
றைவனுக்குச் சமமான பெற்றோர் இல்லத்து
கறையற்ற தூண்டாமணி விளக்குகள்.
ன்றாக வாழ்ந்து தமது பெற்றோர்
நற்பெயர் காத்தல் பிள்ளைகட்கழகு.

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்
சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுதுகொண்டே தொங்கும்.

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்துஒழுகு வார். (143)   

பொருள்: சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியை விரும்புதலாகிய தீமையைச் செய்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர். 

புதன், ஜூன் 29, 2011

என்னையே நானறியேன் - 2

ஆக்கம்: கௌசி,  ஜேர்மனி
கணவனின் உழைப்பும் தன்மேல் அவன் கொண்ட காதலின் பிரதிபலிப்பும் ஒன்றாய் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அழகான சோபாவில் காய்த்துப் போன அவன் கரங்களின் அடையாளங்கள் தென்பட்டன. சமையலறை அடுப்பிலே நித்திரையின்றிச் சிவந்திருந்த அவன் கண்கள் தோன்றின. ரம்மியமான தளபாட அழகிலும் உழைத்து உழைத்துத் தேய்ந்து போன அவன் உடற் பொலிவு தென்பட்டது. மனம் இளகிப் போனாள். அவன் இரு கரங்களையும் 

இணைத்தெடுத்தாள். தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். ' இஞ்ச பாருங்கோ! உங்களின்ர இந்த சின்ன இதயத்துக்குள்ள ஒதுங்க ஒரு இடம் தந்தாலே எனக்குப் போதும் பாருங்க. ஆபத்துக்கு உதவாத பிள்ளை> அரும்பசிக்கு உதவாத அன்னம்;> தாபத்தைத் தீராத தண்ணீர்> தரித்திரம் அறியாத பெண்கள்> கோபத்தை அடக்காத வேந்தன்> குறுமொழி கொள்ளாச் சீடன்> பாபத்தைத் தீராத் தீர்த்தம்> பயனில்லையாம் ஏழும். எனவே தரித்திரம் அறியாத பெண்ணல்ல நான். இரத்தம் சிந்தி நீங்க என்னை ராணி போல் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பெரிசா நான் கனவொன்றும் காணவில்லை. எப்படி நீங்கள் வாழுகின்றீர்கள் என்றெல்லாம் கேட்டு என் கழுத்தை நான் உங்களிடம் நீட்டவில்லை. எப்படி நீங்கள் வாழ்ந்தாலும் உங்களோடு வாழவேண்டும். அதுதான் எனக்குச் சந்தோஷம்'' அவள் மனமும் உதடும் உதிர்த்த வார்த்தைகளில் உள்ளம் நெகிழ்ந்தான் 
கரண். ஆடம்பரமான வாழ்வு வரும் போகும். ஆனால் ஆதரவான உள்ளம் கிடைப்பதும் அரிது> தொடர்வதும் அரிது. 
                          
வரதேவி வாழ்க்கைத்துணைவன் ஆதரவான ஆண்மகன் மட்டுமல்ல> நாடுவிட்டு வேறுநாடு வந்தாலும்> தாய் பாலோடு சேர்த்துப் பருகத் தந்த தமிழ் அறிவுடன்> நூற்றாண்டு கடந்தும் அந்நிய மண்ணில் தமிழ் ஆட்சிபுரிய வேண்டி ஹரிதாஸ் நிறுவன ஆதரவுடன் தமிழ்க்கல்விச்சாலை அமைத்துத் தனியனாய்த் தமிழ் கற்பித்த வந்த தமிழ்மகன். 
         அவன் போட்டுவிட்ட பாதை மேல் போகத்துணிந்தாள் வரதேவி. அவள் ஆசிரியையாய்ப் பணியாற்றிய அறிவு மட்டும் கொண்டவளல்ல. குழந்தைகள் மனங்கோணாக் குணவதியும் கூட

தம்மிலும் தம் அறிவால் வளர்வார்> சிறப்புடையவராயின். உள்ளம் குதூகலிப்பார் உண்மை அசிரியர். ஒருவர் கற்ற இன்பத்திலும் மேலாமே தான் கற்ற கல்வி பிறர் அறியச் சொலல். இத்தன்மை அனைத்தும் பெற்ற வரதேவி> புகலிடம் தேடிவந்த இடத்திலேயே வந்து மூன்றாம் நாள் புகழிடம் பெறும் மாணவப்பூங்காவுக்குள் நுழைந்தாள். பூத்தும் பூக்காதிருந்த பூந்தளிர்கள் கண்டு அவள் மூளைக்குள் இலட்சிய விருட்சம் வளரத் தொடங்கியது. தான் கற்றவை தான் கற்பித்தல் மூலம் பெற்ற அநுபவச் சொத்து அத்தனையையும் இந்தத் தளிர்களுக்கு நீராய் வார்க்கத் தொடங்கினாள். தவிர்க்க முடியாதது பசியும்>தாகமும். அடக்கமுடியாதது ஆசையும்> துக்கமும். வரதேவி கொண்டது கல்வித் தாகம். அவளால் அடக்கமுடியாத ஆசை எதிர்கால சிற்பிகள்ஆசிரியப்பணி ஒரு ஆனந்தப்பணி. கல்விநாடிவரும் செல்வங்களுக்குள்ளே புகுந்துவிட்டால்> கவலைகள் விடைபெறும். உள்ளம் துள்ளல் இசைபாடும். அதட்டவும் அணைக்கவும் ஆசானுக்குள்ள உரிமை பெற்றோருக்குள்ள உரிமை போலானது. அதைச் சேவையாய் உணர்வோர் உடல்வலி உளவலிநோக்கார். ஆசிரியரை ஒட்டிக் கொண்ட மாணவர் எத்தனை ஆண்டுகள் கடந்தும் அவரை மறவார். எதிர்கால உலகச் சிற்பிகள் சரியான முறையில் வடிக்கப்படாவிட்டால், உலகம் அவர்கள் கைகளால் உருமாறிச் சீரழியும். விஷக்கிருமிகள் போல் உலகுநோய் பெற்று சிறிதுசிறிதாய் உலகத்தையே அழித்துவிடும். எனவே ஆசிரியர் என்பான் ஆசு இரியர் குற்றங்களை விட்டோடச் செய்வார். ( இவர்கள் மாணவர்களுக்கு உலகத்தையும் பாடத்தையும் கற்றுத் தரல் வேண்டும். மூலபாடங்களை விதி மறவாமல் பாதுகாக்கக் கற்பித்தல் வேண்டும். கேட்டதைப் பலமுறை சிந்திக்க வைத்தல் வேண்டும். மனதில் பதியக் கேட்ட கருத்துக்களை அவர் மனதில் மீண்டும் கேட்டுப் பதிய வைத்தல் வேண்டும். கற்கும் மாணவர்களோடு பழகத் தூண்டுதல் செய்தல் வேண்டும். ) எனவே இப்பணியூடு வாழும் நாட்டில் தமிழ் மணம் வீசவேண்டும் என்றெண்ணிப் பணி தொடர்ந்தாள் வரதேவி. இப்படி இந்நாட்டில் எத்தனை திக்குகளில் இத்தகு நோக்குடன் பற்பலர் வாழ்ந்தார்களோ! இப்போது சாம்பல் மூடிய நெருப்பாய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ! 
                       
இவ்வாறாக உள்ளம் கொண்ட தீவிரம் தொடர்ந்தது. அத்தோடு வயிற்றில் அவள் உதிரம் சுமந்த வாரிசொன்றும் உருவானது. ஒரு குறிக்கோளுடன் தொடர்வார் அக்குறிக்கோள் நிறைவேறப் பலவித முயற்சிகளில் ஈடுபடல் புதிதன்று. ' இஞ்சபாருங்கோ! படிப்பிப்பது மட்டும் பிள்ளைகளுக்குப் போதாது. ஒரு பிள்ளை கேட்கிறதை மறந்து போகும். பார்க்கிறதை நினைவில் வைக்கும். செய்வதைத்தான் கற்றுக் கொள்ளும். அதனால், பரீட்சை வைப்போம்> கலைகள் விளையாட்டுக்களில் பயிற்சி கொடுப்போம். போட்டிகள் மூலம் திறமைகளைக் கொண்டுவருவோம'';. என்று கணவனுக்கு உந்துதலைக் கொடுத்தாள். ஆனால், இந்த சமுதாயம் இருக்கிறதே, இனிப்பாய் இருந்தால், விழுங்கிவிடும். கசப்பாய் இருந்தால் துப்பிவிடும். இவள் முயற்சிகளின் முடிவுதான் என்ன...?
(தொடரும்)

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்.

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்




அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல் (142)

பொருள்: அறநெறியை மறந்து தீ நெறியில் நிற்பவர் எல்லாரினும், பிறன் மனைவியை விரும்பி அவளுடைய வீட்டு வாயிலில் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.

செவ்வாய், ஜூன் 28, 2011

நாடுகாண் பயணம் - கேமன் தீவுகள்

நாட்டின் பெயர்:
கேமன் தீவுகள் (Cayman Islands)

நாட்டின் சர்வதேசத் தகுதி:
பிரித்தானிய அரசின் கடல்கடந்த ஆட்சிப் பகுதி.

அமைவிடம்:
மேற்குக் கரீபியன் கடல் 

எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் கரீபியன் கடல், இருப்பினும் வடக்கில் கியூபாவும், வட கிழக்கில் ஜமைக்காவும் உள்ளன.

நாட்டின் மொத்த தீவுகளின் எண்ணிக்கை:

தீவுகளின் பெயர்கள்:
பெரிய கேமன்(Grand Cayman), சிறிய கேமன்(Little Cayman), கேமன் பிராக்(Cayman Brac) 


தலைநகரம்:
ஜோர்ஜ் டவுன்(George Town)

ஆட்சிமுறை:
பிரித்தானிய அரசியின் ஆட்சிக்குட்பட்ட கடல் கடந்த பிரதேசம்.

அலுவலக மொழி:
ஆங்கிலம் 


ஏனைய மொழி:
ஸ்பானிஷ் 


கல்வியறிவு:
98 %


சமயங்கள்:
கிறீஸ்தவம்/ரோமன் கத்தோலிக்கம் 


ஆயுட்காலம்:
ஆண்கள் 78 வருடங்கள் 
பெண்கள் 83.3 வருடங்கள் 

நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத் (இங்கிலாந்து அரசி)

ஆளுநர்:
டுங்கான் டெயிலர் (Duncan Taylor) *இது 28.06.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

பிரதமர்:   
மெக்கீவா புஷ் (McKeeva Bush) *இது 28.06.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

ஜமைக்காவிடமிருந்து பிரிந்தது மற்றும் பிரித்தானியாவின் கடல்கடந்த பிரதேசமாகிய ஆண்டு:
1962

பரப்பளவு:
264 சதுர கிலோமீட்டர்கள் 

சனத்தொகை:
54,878 (2010 மதிப்பீடு)


நாணயம்:
கேமன் தீவுகளின் டாலர்(Cayman Islands dollar / KYD)

இணையத் தளக் குறியீடு:
.ky

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
001-345


விவசாய உற்பத்திகள்:
காய்கறி, பழங்கள், மிருக வளர்ப்பு, ஆமை வளர்ப்பு.

தொழிற்துறைகள்:
சுற்றுலா, வங்கித்துறை, நிதித்துறை, கட்டுமானம், தளபாடம்.

ஏற்றுமதிகள்:
ஆமை, ஆமை ஓடு, ஆமையிலிருந்தும், ஆமை ஓட்டிலிருந்தும் தயாரிக்கப் பட்ட பொருட்கள், மற்றும் சில நாளாந்தப் பாவனைப் பொருட்கள்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • கொலம்பஸ், மற்றும் ஆங்கிலேயக் கடலோடி சர் பிரான்சிஸ் டிரேக்(Sir Francis Drake) ஆகியோர் தமது கடற்பயணங்களின் போது இத்தீவுகளில் தரை இறங்கியது மட்டுமல்லாமல் இத்தீவுகளைப் பற்றியும் தமது பயணக் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர்.
  • 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தீவுகளில் மக்கள் குடியேற ஆரம்பித்தனர். ஆரம்ப காலங்களில் இத்தீவுகளில் குடியேறியவர்களில் கணிசமானோர் கடற் கொள்ளையர்கள், அகதிகள்(ஸ்பானிய அகதிகள்), கப்பல் உடைந்து கடலில் மூழ்கியதால் கரை சேர்ந்தோர் ஆவர்.
  • இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் ஆட்சிக் காலத்தில் இத்தீவுகளின் அருகில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்தின் பத்து வியாபாரக் கப்பல்கள் புயல், மற்றும் இராட்சத அலைகளால் அலைக்கழிக்கப் பட்டு விபத்துக்கு உள்ளானபோது இத்தீவு வாசிகள் கப்பலையும், வணிகர்களையும் போராடிக் காப்பாற்றினர். அம்மாபெரும் தியாகத்திற்கு நன்றிக் கடனாக இத்தீவு வாசிகள் பிரித்தானியப் பேரரசிற்கு வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை என மன்னர் கட்டளையிட்டார். அந்த நடைமுறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
  • இத்தீவில் வாழும் மக்கள் வருமான வரி, சொத்து வரி எதுவும் அரசிற்குச் செலுத்தத் தேவையில்லை. ஏற்றுமதி இறக்குமதியாளர்களிடமிருந்தும் மிகச் சிறிய அளவிலேயே வரி அறவிடப் படுகிறது.குழந்தைகளின் உணவு,பால்மா, மருத்துவ மற்றும் பாவனைப் பொருட்களுக்கும்,புத்தகம் போன்றவைகளுக்கும் இறக்குமதி வரி செலுத்தத் தேவையில்லை.
  • சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சிறிய தொகை வரி அறவிடப் படுகிறது.(ஒரு நபரிடமிருந்து சுமாராக 25 அமெரிக்க டாலர்கள்)
  • நாட்டில் நேரடி வருமான வரி இல்லை என்பதால் உலகின் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தமது கிளை நிறுவனங்களை இந்நாட்டில் திறந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்நாட்டில் 93,000 பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன.(நாட்டின் சனத்தொகை சுமார் 55,000 என்பதை நினைவிற் கொள்க) இவற்றில் 300 வங்கிகளும், 800 காப்புறுதி நிறுவனங்களும், 10,000 இற்கு மேற்பட்ட சீட்டுப் பிடிக்கும்(பங்குச் சந்தைக்குக் கடன் கொடுக்கும்) நிறுவனங்களும் அடங்கும்.
  • மக்கள் வருமான வரி, சொத்து வரி எதுவும் செலுத்தாவிட்டாலும் இந்நாட்டு அரசினால் மக்களுக்கு உயர்வான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. உலகில் சுவிட்சர்லாந்து(சுவிஸ்) மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கைத் தரத்தை 'கேமன் தீவுகளின் மக்கள்' அனுபவித்து வருகின்றனர்.
  • இத்தீவு மக்களின் மருத்துவம், சுகாதாரம் போன்ற தேவைகளுக்குப் பொறுப்பாக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் இங்கிலாந்தில் பணியாற்றி வருபவருமாகிய தேவி பிரசாத் செட்டி(Devi Prasad Shetty) எனும் மருத்துவ நிபுணர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • மேற்படி மருத்துவ நிபுணரின் கண்காணிப்பு, வழிநடத்தலின்படி 2000 படுக்கை வசதிகள் கொண்ட 'நாராயணா மருத்துவமனை'(Narayana Cayman University Medical Centre) அந்நாட்டு அரசின் உதவியுடன் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனை மக்களுக்கு மருத்துவ சேவையையும், மருத்துவபீட மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியையும் வழங்கி வருகிறது.(தகவலுக்கு நன்றி en.wikipedia.org) 
  • சிறிய தீவுக் கூட்டமாக இருப்பினும் இத்தீவுகளில் நூற்றுக்கு மேற்பட்ட இன மக்கள் வாழ்கின்றனர்.
  • இந்நாட்டில் இரண்டு பத்திரிகைகள் வெளியாகின்றன(Cayman Compass, Cayman Net News), ஒரு தொலைக்காட்சிச் சேவையும், 16 வானொலிச் சேவைகளும் இயங்குகின்றன.
  • நடுக்கடலில் இருக்கும் தீவுகள் என்பதால் இடையிடையே புயலின் தாக்கத்திற்கு உட்படுவது உண்டு.கடந்த எண்பத்தேழு ஆண்டுகளில் முதற் தடவையாக 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11, 12 ஆம் தேதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக பெரிய கேமன்(Grand Cayman) தீவிலுள்ள 95% மான கட்டிடங்கள் சேதமடைந்தன. 


    இன்றைய பழமொழி

    மூத்தோர் சொல்
    கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா?

    குறள் காட்டும் பாதை

    இன்றைய குறள்


    பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதமை ஞாலத்து 
    அறம்பொருள் கண்டார்கண் இல். (141) 

    பொருள்: அயலான் மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இருக்காது.

    திங்கள், ஜூன் 27, 2011

    தாய்லாந்துப் பயணம் - 7

    ஆக்கம்:வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
    காலையுணவு முடித்து அறைக்கு வந்தவுடனேயே கணவர் தொலைக் காட்சியில் செய்தி தான் கேட்பார்.
    செய்தியின் பின்ணனியில் படங்கள் வருவதால் ஓரளவு என்ன விடயமென்று ஊகிக்க முடிந்தது. தாய்லாந்து இளவயதினர் ஆணும் பெண்ணுமாகவே செய்தி வாசித்தனர். அவர்கள் மொழியின் தொனியில்  தேவையான இடத்தில் அழுத்தம் கொடுத்து செய்தி வாசித்த முறை மிக கம்பீரமாகவே இருந்தது. தமது மொழியை அவர்கள் அழகாகக் கையாண்டனர்.
    ஒவ்வொரு வசனங்களின் முடிவில் முற்றும் தரிப்புக்கு முன் இறுதிச் சொற்களை உச்ச சுருதியில் எம்மவரில் சிலர் உயர்த்தி ராகம் இழுப்பது போல அசிங்கம் எதுவுமே செய்யவில்லை. வாசித்தார்…கூறினார் என்று முடிக்கும் போது அந்த  ர்…ர்..க்குக் கொடுக்கும் அழுத்தம் இருக்கே அது சொல்லும் தரமன்று…( ஒரு வகையில் தமிழ் கொலை தான் என்பது என் கருத்து.)
    எமது அழகான தமிழை, தாம் இலக்கம் ஒன்றான செய்தியாளர் என்ற நினைப்பில் சிலர் செய்தி வாசிப்பில் மேலே கூறிய முறையில் இங்கு அசிங்கம் பண்ணுவதை இந் நேரத்தில் என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.
    ஆரம்ப நாட்களில் அழகாகச் சித்திரம் போல செய்தி வாசிப்பார்கள். நாம் ரசிப்போம். நாட்கள் செல்லச் செல்ல, சிறிது அனுபவம் வர தலை, கண்களால் அபிநயங்கள் பிடித்து நாடகமாகவே இங்கு ஆக்குகிறார்கள் செய்தி வாசிப்பை.
    சரி மேலே தொடருவோம்.
    பத்து மணி போல நாம் வெளியே வெளிக்கிட்டோம்.
    முதலாவதாகத் 
    தாய்லாந்தில் வாங்கப் போகும் பொருட்களைக் கடல்வழி மார்க்கமாக டென்மார்க் அனுப்புவதற்குத் தரகர்களைத் தேடினோம். அங்கு தடுக்கி விழுந்தாலும் தரகர்கள்,  cargo  ஏஐன்சிக் கடையாகவே இருந்தது. மூட்டை மூட்டையாகப் பொதிகளைக் கட்டிக் கப்பலுக்கு அனுப்ப, கனரக வாகனங்களில் தெருவை அடைத்து ஏற்றியபடியே உள்ளனர்.
    இந்தத் தரகு வேலையோடு, உடம்பு பிடித்து விடுதலையும், அதாவது மசாஜ் செய்வதையும் அவரவர் தங்கியிருக்கும் வாடி வீட்டினரும் செய்கின்றனர். 
    விலைகளிலே தான் வித்தியாசம் உள்ளது.
    இலங்கைத் தமிழர், சிங்களவர், ஆபிரிக்கர், இந்தியர், மொறிசியர், பிலிப்பைன்ஸ் என்று பல்லின மக்களும் வந்து பொருட்கள் வாங்கிப் பொதி பொதியாக சுமந்தபடி தாம் தங்கியிருக்கும்  வாடி வீட்டிற்கு நடக்கின்றனர். யாரைப் பார்த்தாலும் கையில் ஒரு பெரிய பொதியுடனே தான் நடக்கிறார்கள். இவைகளைப் பார்க்க எமக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
    கடைகளில் ஒரு பொருளைக் கண்டு வாங்க விலை கேட்டால் 200 பாத் என்கிறார்கள். ஒரு பொருளை 2 அல்லது 3 ஆக வாங்கினால் மொத்த வியாபார விலை 180, 160 பாத் என்கிறார்கள். அதையே 10 பொருளாக வாங்குகிறோம் என்றால் 120 அல்லது 80 பாத்துக்கும் விலையில் இறங்குகிறார்கள் பேரம் பேச வேண்டும். பயணத் தகவலில் இதையும் தருகிறார்கள். பொருட்கள் மிக மிக மலிவு தான்.
    இரண்டாவதாக 
    நாம் தங்கிய அறையில் ஒரு பழைய மணம், பூஞ்சண மணம், தூசி மணம் வந்தது. அது எனக்கு அருவருப்பாக இருந்தது. இரண்டு   இரவுக்குப் பிறகு அறைக்கு அங்கேயே தொடர்ந்து பதிய வேண்டும், அல்லது வேறு இடம் தேட வேண்டும். நாம் வேறு இடம் தேட விரும்பினோம்.
    மூன்றாவதாக
    உடம்பு பிடித்து விடுதல், மசாஜ் செய்ய இடம் தேடினோம். தெருவுக்குத் தெரு உடம்பு பிடித்து விடும்    இடங்கள் இருந்தன. முதலில் உடம்பு பிடித்து விடும் நிலையத்திற்குச் சென்றோம். ஒரு மணி நேரம் உடம்பு பிடித்து விட, 180 பாத் அதாவது 30 குரோனர்கள். 60 நிமிடங்களும் பிடித்து விடுகிறார்கள். இதுவே டென்மார்க்கில் என்றால் ஒரு மணித்தியாலத்திற்கு 300 குரோனர்கள். ஒரு மணித்தியாலம் என்று கூறி 20  நிமிடங்களே பிடித்து விடுவார்கள். எதுவும் கூற முடியாது.                                                 
    ஒரு தடவை அது பற்றி நான் டென்மார்க்கில் கேட்டும் பார்த்தேன். அது அப்படித் தான்.
    முதலில் 180 பாத் என்று தயங்கினேன். ஆல் பிரித்து 30 குரோணர் தானே என்று  ஊக்கப் படுத்தியது கணவர் தான்.
    நான் தாய் மசாஜ்  ம், (body massage) ம்,
    கணவர் பாதம் மசாஜ்ம் செய்தோம். 
             
     பத்து வருடமாக டென்மார்க்கில் தேவை ஏற்படும் போது நான் இந்த மசாஜ்க்குச் செல்கிறேன்……. 10 வருடங்கள் என்பது மிக நீண்ட காலமல்லவா! …..    
     -பயணம் தொடரும்-         

    இன்றைய பழமொழி

    மூத்தோர் சொல்
    பெண்ணின் யோசனையால் பயனில்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்.

    குறள் காட்டும் பாதை

    இன்றைய குறள்


    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் 
    கல்லார் அறிவுஇலா தார். (140) 

    பொருள்: உலகிலுள்ள உயர்ந்தவர்களோடு ஒத்து ஒழுகுதலை அறியாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரேயாவார்.

    ஞாயிறு, ஜூன் 26, 2011

    கவிதைப் பாமாலை


    அன்பார்ந்த வாசகப் பெருமக்களே

    இன்றைய தினம்(26.06.2011 ஞாயிற்றுக்கிழமை) நமது தீவகக் கிராமங்களில் ஒன்றாகிய அல்லைப்பிட்டியில் அமைந்திருக்கும் அதி அற்புத அந்தோனியார் தேவாலயத்தின் இறுதி நாட் திருப்பலியும், திருவிழாவும் நடைபெறுகின்றன. இதனை முன்னிட்டு ஆவ்வூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அவ்வூரில் வாழ்ந்து வருபவருமாகிய 'கவி வித்தகர்' பாலசிங்கம் அவர்கள் அந்திமாலைக்கு அனுப்பி வைத்துள்ள 'கவிதைப் பாமாலை' ஒன்றை உங்களுக்காகத் தருகின்றோம்.  



    யாமறிந்த மொழிகளிலே

    ஆக்கம்: சுஜீதா கண்ணன்,
    கனடா
    தேமதுரத் தமிழோசை

    தமிழ்த் திரைப்படப் பாடகர்களில் பலர் வேற்று மொழிக் காரர்களாக இருப்பது நீங்கள் அறிந்தது. இருப்பினும் அவர்கள் தமிழ் மொழியை ஓரளவுக்கேனும் தெளிவாக உச்சரிப்பதற்குக் காரணம் அவர்களது 'மொழி' தமிழ் மொழியுடன் தொடர்புள்ள ஒரு இந்திய மொழியாக இருப்பதுதான். ஆனால் இந்தியர்கள் தவிர்ந்த வேற்று நாட்டவர்கள் எமது மொழியில் பாடினால் நமக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்குமல்லாவா? இந்த வாரம் தமிழ் மொழியைப் பேசத் தெரியாத, மலாய் மொழியை மட்டுமே பேசத் தெரிந்த மலேசியத் தாத்தா ஒருவர் தமிழ்ப் பாடல்கள் சிலவற்றைப்  பாடுவதைக் கேட்போம். இந்த மலேசிய முதியவரின் காதுகளில் விழுந்து, அவரது இதயத்தில் நுழைந்த எம் தமிழை, தமிழிசையைப் போற்றுவோம்.
    பாடல் ஒன்று


    பாடல் இரண்டு 



    காணொளி உதவிக்கு நன்றி: kannady channel


    உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

    இன்றைய பொன்மொழி

    மூத்தோர் சொல்
    தேநீரும் காதலும் சூடாக இருக்கும் வரைதான் ருசியாக இருக்கும்.

    குறள் காட்டும் பாதை

    இன்றைய குறள்


    ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய 
    வழுக்கியும் வாயால் சொலல். (139)

    பொருள்: மறந்தும் தீமையான சொற்களைத் தம் வாயினால் கூறுதலாகிய செயல்கள் நல்லொழுக்கம் உடையவர்க்கு இயலாதனவாகும்.

    சனி, ஜூன் 25, 2011

    இன்றைய பொன்மொழி

    மூத்தோர் சொல்
    பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னால் அழுவாள், ஆண்பிள்ளை விவாகத்திற்குப் பின்னால் அழுவான்.

    குறள் காட்டும் பாதை

    இன்றைய குறள்


    நன்றிக்கு வித்துஆகும் நல்ஒழுக்கம்; தீயொழுக்கம் 
    என்றும் இடும்பை தரும். (138) 

    பொருள்: நல்லொழுக்கம் ஒருவனுக்கு அறத்திற்குக் காரணமாகி நிற்கும். தீய ஒழுக்கம் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் துன்பத்தையே தரும்.