வியாழன், ஏப்ரல் 28, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 3.2


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)
இப்போது எனது தாயார் புதிதாக தனது பாணியில் 'விசாரணையை' ஆரம்பித்தார். எங்கே, எவ்வாறு நான் தவற விடப்பட்டேன்? என்பதுதான் விசாரணையின் கருப்பொருள். என் அண்ணன் இந்தத் தடவை பதில் சொல்லுவதற்குப் பின்னடித்தான். தன்மீது முழுத் தவறு என்று தெரிந்ததாலோ என்னவோ, தத்தித் தடுமாறி, மென்று விழுங்கிக் கொண்டிருந்தான். விசாரணை என் பக்கம் திரும்பியது. நான் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், மாங்காய் பொறுக்குவதற்காகக் கணேப்பிள்ளையர் வளவிற்குச் சென்றது தொடக்கம், நான் காணாமல் போக நேர்ந்தது வரை கடகடவென்று கூறி முடித்தேன். இடையிடையே நான் 'பயந்துபோன' தருணங்களைப் பற்றி விபரிக்கும்போது அழுகை வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டேன். அம்மாவின் கோபமான 'பார்வை' அண்ணாவின் பக்கம் திரும்பியது.
ஆச்சரியம் என்னவென்றால் அம்மா என் அண்ணாவுக்கு ஒரு அடிகூட அடிக்கவில்லை. அப்பா வந்தவுடன் நடைபெறப் போகும் 'விசாரணையில்' கண்டிப்பாக அடிவிழும் என்பது அம்மாவின் ஊகம் போலும். அம்மாவின் 'விசாரணை' அண்ணாவையும் என்னையும் பயமுறுத்துவதாகவே அமைந்திருந்தது.
"உன்னோடு வந்த சின்னப் பிள்ளையை, ஒழுங்காக வீட்ட கூட்டிக்கொண்டு வரவேண்டியது உன்ர பொறுப்பு, இடையில என்னத்துக்கடா மாங்காய் பொறுக்க போனனீங்கள்? எல்லாம் சரி, நீ என்னத்துக்கு 'சிலேற்ற' விட்டிட்டு  ஓடினனி? இக்கணம் கொப்பர் வந்து 'முதுகுத் தோலை' உரிப்பார் றெடியா இருங்கோ"
அம்மாவின் விசாரணையில் அடி ஏதும் விழாதது எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியே, ஆனாலும், அப்பர் வந்து 'முதுகுத் தோலை' உரிக்கப் போகிறார் என்பதை நினைக்கையில் எனக்கு நடுக்கமாக இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு தடவையும் 'முதுகுத் தோல் உரித்தல்/உரியும்' என்ற வார்த்தைகள் என் காதுகளில் விழும்போதெல்லாம் அவ்வாறு முதுகுத் தோல் உரிக்கப் பட்டால் எவ்வாறு இருக்கும் என்று 'கற்பனை' செய்து பார்த்து நடுக்கம் கொள்வது எனது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு முதுகுத் தோல் உரிக்கப் படுவதில்லை என்பதை உணர்கின்ற வயது அதுவல்லவே? அது பயமுறுத்துவதற்காகக் கூறப்படும் வாக்கியம் என்பதை எனக்கு ஏழு வயதாக இருக்கும்போதுதான் உணர முடிந்தது. தமிழில் அது ஒரு 'உருவக அணி' என்பதை உயர்தர வகுப்பில் கல்வி கற்கும்போது தெரிந்துகொண்டேன்.
இந்த பயம் எம்மை ஆட்கொண்ட காரணத்தால் அன்று நானும் அண்ணாவும் வெளியே சிறுவர்களோடு விளையாடச் செல்லவில்லை. எங்கள் வீட்டிற்குப் பின் பக்கமே எங்கள் விளையாட்டிடம் ஆனது.  வீட்டின் கோடிப்புறத்தில் மணலாக இருக்கும் இடங்களில் மிகவும் அழகாக ஒரு சிறிய குழியை ஏற்படுத்துகின்ற ஒருவகைப் பூச்சியினம் வாழ்ந்துவரும். அந்த மணலில் வாழ்ந்துவரும் மிகச் சிறிய பூச்சிகளைப் பிடித்து 'சிரட்டைகளால்' மூடி வைப்போம்.ஒரு சில நிமிடங்களால் சிரட்டையைத் திறந்துபார்த்தால் அந்தப் பூச்சி மாயமாய் மறைந்திருக்கும். அந்தப் பூச்சி மணலைக் கிளறியபடி ஏதாவது ஒரு வழியால் தப்பித்துப் போய்விடுகின்ற விடயம் எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாகும்.
இன்றைக்கு அப்பா தாமதாக வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்பா நேரத்தோடு வீட்டிற்கு வந்தால், மாங்காய் பொறுக்கப் போனதற்காகவும், என்னை தவற விட்டதற்காகவும் அண்ணாவுக்கு அடியும், சிலேற்றை தொலைத்ததற்காக எனக்கும் அடி விழும் அல்லவா? அப்பா தாமதமாக வீட்டிற்கு வந்தால் நாங்கள் நித்திரையில் இருப்போம். நித்திரையாய் இருக்கும் எங்களை எழுப்பி 'விசாரணை' செய்ய மாட்டார். 
நான் எதிர்பார்த்ததற்கு மாறாகவே அன்று நடந்தது.அப்பா நேரத்தோடு வீட்டிற்கு வந்துவிட்டார்.
வீட்டிற்கு வந்த அப்பா எங்களோடு சேர்ந்து 'இரவுணவை' உண்ணும்போது, என் மனதில் 'முதுகுத் தோல்' உரியும் நிகழ்வு படமாக ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு இருந்த பயத்தில் அன்று அம்மா தந்த 'சோறும் நண்டுக் குழம்பும்' சுவையாக இருந்ததா? சோறு இரைப்பையில் ஒழுங்காக சென்று இறங்கியதா? என்பவையெல்லாம் இன்றுவரை ஞாபகமில்லை. ஆனால் சாப்பிட்டு முடித்ததும் அம்மா 'நேர்மையின் மறு அவதாரமாக' நண்பகலில் நடந்த சம்பவத்தை அப்பாவிடம் கொஞ்சம் 'மென்மையான' முறையில் எடுத்துக் கூறினார். எங்கள் அப்பாவிடம் எப்போதுமே ஒரு வழக்கம் இருந்தது. அதாவது 'பர்மிய, பாகிஸ்தானிய' இராணுவ ஆட்சியாளர்கள் போல, திடீர் புடீர் என முடிவுகளை எடுப்பது. அது அற்ப விடயமாக இருந்தாலென்ன, மிகப்பெரிய விடயமாக இருந்தாலென்ன அவர் அப்படித்தான் முடிவுகளை எடுப்பார். அன்று அவர் எங்களை அடிக்கவில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவு என்னை மிகப்பெரும் திகைப்பிற்கு உள்ளாக்கியது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக