செவ்வாய், மார்ச் 22, 2011

தாரமும் குருவும்...,

இ.சொ.லிங்கதாசன்
(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)
பகுதி 1.5


பாலர் வகுப்பு(Nursery/kindergarten)

பாலர் வகுப்பில் எனது 'மறக்க முடியாத' முதல் நாள் பற்றிக் கூற ஆரம்பித்த நான் திடீரென்று வகுப்பில் பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? என்பதைப் பற்றியெல்லாம் விளக்க ஆரம்பித்து விட்டேன். உங்களில் எவரேனும் 'ஆயிரத்தொரு இரவுக் கதைகள்' படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அதில் கதைகள், துணைக் கதைகள், துணைக் கதைக்குள் குட்டிக் கதைகள் என நீண்டு செல்லுமே... அது போலவேதான் எனது இத்தொடரும் ஆங்காங்கே சில விடயங்களை தொட்டும், அலசியும், ஆராய்ந்தும் செல்லும். இதில் உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இருக்காது என்றே நம்புகிறேன்.நிற்க.
முதலாவது நாளில்(பாலர் பள்ளியில்) அழுது 'அமர்க்களம்' செய்யும் சிறுவர், சிறுமியர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதற்கும் அப்பால் எனக்கு ஒரு அபிப்பிராயம்(மதிப்பீடு) உண்டு. அதாவது உலகத்தை, புதிய மனிதர்களை, புதிய சூழலை ஆர்வத்தோடு நோக்குகின்ற, அறிய முற்படுகின்ற ஒரு குழந்தை முதலாவது பள்ளி நாளில் அல்லது பாலர் பாடசாலை நாளில் அழாது என்பதே எனது கருத்தாகும்.இதற்கு மாற்றுக் கருத்துள்ளோர் எனக்கு எழுதலாம். அந்த முதலாவது நாளில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்றுதானே கேட்கிறீர்கள்?. மேலே நான் குறிப்பிட்ட 'அழுவுணிப்' பிள்ளைகள் அத்தனை பேரிலிருந்தும் வேறுபட்டவனாக, அழாமல், அடம்பிடிக்காமல், 'சமத்தாக' உட்கார்ந்திருந்தேனாம். இதைச் 'சுய புகழ்ச்சி' எனக் கூறுவோருக்கு என்னிடம் வாதமோ, பதிலோ இல்லை. "என்னைப்போல் பல பிள்ளைகள் அழாமல் இருந்தார்களா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் நான் அழாமல், 'டீச்சரின்' சொல் கேட்ட பிள்ளையாக இருந்தேன்" என்பது மட்டும் 100% ஞாபகம் இருக்கிறது. இதில் 'டீச்சர்' என்ற ஆங்கில வார்த்தையை உபயோகித்தேன். அது மிகவும் தவறு. காரணம் 'டீச்சர்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'தேவதை' என்றொரு வார்த்தையைத்தான் நான் உபயோகித்திருக்க வேண்டும்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

Maha denmark சொன்னது…

good

கருத்துரையிடுக