வியாழன், மார்ச் 24, 2011

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு அத்தியாயம் 19


ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
இது தவிரவும் சிறிய மீன்களில் கறி சமைக்கும்போதும், கருவாட்டுக் குழம்பு சமைக்கும்போதும் கத்தரிக்காயைச் சேர்க்கும் வழக்கம் சில பிரிவு மக்களிடம் காணப் படுகிறது. அதேபோல் வாழைக்காய், பலாக்கொட்டை போன்றவற்றை எண்ணையில்பொரித்து உண்பதுபோல் கத்தரிக் காயையும் பொரித்து உண்ணும் வழக்கமும் எமது இலங்கைத் தமிழ் மக்களிடம் காணப் படுகிறது". என்று கத்தரிக்காயைப் பற்றி எனக்குத் தெரிந்த விடயங்களை அவரிடம் ஒப்புவித்தேன்.
"பரவாயில்லை, கத்தரிக்காயைப் பற்றி மட்டுமல்லாமல் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்" எனப் பாராட்டியவர் தொடர்ந்தார். "இது மாட்டும்தானா? அல்லது வேறு ஏதும் நடைமுறைத் தகவல்கள் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டார். நானும் விடுவதாக இல்லை. இன்னும் சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றேன். கூறுங்கள், கூறுங்கள் கேட்பதற்கு ஆவலாயிருக்கிறேன் என்றார்.
அதாவது கத்தரிக்காய்க் குழம்பில் கருவாடு சேர்த்துச் சமைக்கும் வழக்கம் இலங்கையில் பரவலாக எல்லாப் பாகத்திலும் வாழ்கின்ற மக்களிடமும் காணப் படுகிறது. ஆனால் இவ்வழக்கம் யாழ் மாவட்டத்தின் 'வடமராட்சி' பகுதியில் விசேடம். பல வருடங்களுக்கு முன் நான் சந்தித்த யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் யாழ் மாவட்டத்து உணவுகள், அவற்றின் 'நாவூற' வைக்கும் சுவைகள் பற்றி பேச்சு எழுந்தபோது பின்வருமாறு கூறினார்:
"நமது பகுதி மக்கள் 'சுவைப் பிரியர்கள்', அவர்களுக்கேயுரிய ஒரு வழக்கம் இருக்கிறது, மீன் இனங்களில் மற்றும் கருவாட்டில் 'திரியாப்பாரை'(Alectis Indicus) என்று ஒரு இனம் இருக்கிறது. அதைக் கண்டால் விடவே மாட்டார்கள். அந்த மீனாகட்டும், கருவாடு ஆகட்டும் அவற்றில் செய்த குழம்போ, பொரியலோ 'சுவை' சொல்லி மாளாது. இப்போதும் வெளிநாடுகளில் வாழுகின்ற நமது பிரதேசத்தைச் சேர்ந்த மக்களிடம் கேட்டுப் பாருங்கள் அதன் சுவையை" என்று கூறியவர், தொடர்ந்து உபரியாக இன்னொரு தகவலையும் கூறினார், "அதாவது கருவாட்டுக் குழம்பு என்றாலே நினைவுக்கு வருவது 'கத்தரிக்காயும் திரியாப்பாரைக் கருவாடும்' சேர்த்துக் காய்ச்சிய குழம்புதான். இதன் சுவைக்கு நிகராக நில புலங்களைக் கூட எழுதி வைக்கலாம்" என்று வாயில் நீர் ஊறும் வண்ணம் கூறினார். அதுமட்டுமல்லாமல் வடமராட்சிப் பகுதியில் 'திரியாப் பாரை' மீனை அல்லது கருவாட்டை 'தங்கத்திற்கு நிகரானது' என்று கூறுவார்கள். என்று கூறி முடித்தார். இவ்வாறு கத்தரிக்காயின் மகத்துவம் மட்டுமல்லாமல், 'திரியாப் பாரைக்' கருவாட்டின் மகத்துவமும் நான் அறிவேன். என்றேன்.
பரவாயில்லையே கத்தரிக்காய் உங்கள் மக்களின் உணவில் முக்கிய இடத்தை அல்லவா பிடித்திருக்கிறது. என்று வியந்தவரிடம் நான் கூறினேன். எமது மக்களின் உணவில் மட்டுமல்லாமல் 'முல்லாவின்' நகைச்சுவைக் கதையிலும் அல்லவா இடம்பிடித்துவிட்டது. என்றேன் என்னது முல்லாவின் கதையிலுமா? என்றார்.

முல்லாவும் கத்தரிக்காயும்  
அரசரும் முல்லாவும் அருகருகே அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். உணவில் கத்தரிக்காய்க் கறியும் இடம்பெற்று இருந்தது.அரசர் கூறினார் "கத்தரிக்காய் ஒரு அற்புதமான காய்கறி, அதன் சுவையே அலாதியானது" என்றார். உடனே முல்லாவும் "ஆமாம் அரசே, கத்தரிக்காய் மிகவும் சுவையானது" என்றார்.இன்னொருநாள் இருவரும் சேர்ந்து உணவருந்தியபோது மன்னர் கூறினார் "இந்தக் கத்தரிக்காய் ஒரு மோசமான காய்கறி, அதில் எந்தவிதச் சுவையும் கிடையாது" என்றார். உடனே முல்லாவும் "ஆமாம் அரசே கத்தரிக்காய் ஒரு வெறுக்கத்தக்க காய்கறி, அதனை உண்பதால் 'சொறி', 'சிரங்கு' போன்றவையும் ஏற்படுகின்றன" என்றார். உடனே மன்னர் முல்லாவைப் பார்த்துக் கேட்டார்.என்ன முல்லா? அன்று நான் கத்தரிக்காயைப் பாராட்டியபோது நீரும் பாராட்டினீர், இன்று நான் கத்தரிக்காயை இகழ்ந்து பேசும்போது நீரும் வெறுப்பாகப் பேசுகிறீர்? என்று கேட்டார். அதற்கு முல்லா கூறினார் "அரசே நான் வேலை பார்ப்பது, உங்களிடம்தான், கத்தரிக்காயிடம் அல்ல. எனக்குச் சம்பளம் தருவது நீங்கள்தான்,கத்தரிக்காய் அல்ல" என்று பதிலளித்தார்.
எனது கதையைக் கேட்ட திரு.பழனிச்சாமி அவர்கள் "இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் பிழைக்கத் தெரிந்த முல்லா" என்றார் சிரித்துக் கொண்டே.
(தொடரும்)

2 கருத்துகள்:

kovaikkavi சொன்னது…

suvaiyakaullathu ...interesting ..Thank you..
Vetha - Dk

vinothiny pathmanathan dk சொன்னது…

முல்லாவின் பதிலை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன் . கதை சூப்பர் . அத்துடன் கத்தரிக்காய் மட்டும் அல்ல எங்கள் ஊர்பக்கம் முருங்கைக்காயும்
கருவாடு சமைக்கும் போது பயன்படுத்துகின்றார்கள் .தகவலுக்கு நன்றி

கருத்துரையிடுக