ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

நன்றி மடல்

அன்பார்ந்த வாசகர்களே!
'அந்திமாலை' இணையத்தளம் கடந்த தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அல்லைப்பிட்டிக் கிராமத்தில் வாழ்ந்துவரும் கவிஞர் சேவியர் வில்பிரெட்   பாலசிங்கம் அவர்களின் நாற்பதாண்டுகாலக் 'கவிப்பணியைப்' பாராட்டி அவருக்குக் 'கவி வித்தகர்' எனும் விருதினை வழங்கிக் கௌரவித்தமை நீங்கள் அறிந்ததே. மேற்படி 'கவி வித்தகரிடமிருந்து' அந்திமாலைக்குக் கிடைக்கப் பெற்ற நன்றி மடலை வாசகர்களுக்காகக் கீழே தருகிறோம்.



3 ஆம் வட்டாரம் 
அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை .

பிரதம ஆசிரியர்,
அந்திமாலை இணையத் தளம்,
டென்மார்க்

அன்புடையீர்!

பிரதம, நிர்வாக ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவர்க்கும் எனது அன்பு வணக்கம். யாவும் நலம், நலமறிய ஆவல், "அன்புதான் உலக ஜோதி, அன்புதான் உலக மகாசக்தி" எமது உறவுகள் பலமடைந்து வளர இறைவன் ஆசிப்பாராக. அந்தத் தீர்க்க தரிசன வார்த்தையோடு தங்களை மடல்மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு நல்ல எழுச்சியுள்ள சிந்தனையாளனை மடல்மூலம் வந்தனை கூறி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 'முகஸ்துதிக்கு முகம் கழுவும்' சந்தர்ப்பவாதம் நிறைந்த நம் உலகிலே எந்த நிலையையும் எடுத்தியம்பும் முந்து குரலாக இருக்கும் ஒருவரை உளமார நினைப்பதில் உவகையடைகிறேன்.

எனது சிறுவயதில் எழுதிய கவிதைகளை பிஞ்சாக இருக்கும்போதே நெஞ்சமதில் அரங்கேற்றிய ஒரு கலா ரசிகனை தொடர்பு கொண்டதில் பேருவகையடைகிறேன். 

நாற்பதாண்டு காலம் இலை மறை காயாக இருந்த என்னைக் கலை உறையும் கவிஞனாக மாற்றிய முதல் ஊடகமான 'அந்திமாலை' இணையத் தளத்திற்கு வந்தனங்கோடி என் நெஞ்சில் எழுகிறது.

"உண்மை, அஞ்சாமை, நடுநிலைமை" என்னும் வரைவிலக்கணத்தோடு வளரும் அந்திமாலை இணையத் தளம் என்னைக் 'கவி வித்தகராக்கி' , சான்றிதழும், புலமையைப் பொறித்த கேடயமும், இலங்கைப் பணத்தில் ரூபா பத்தாயிரமும், அந்திமாலையில் வெளிவந்த எனது கவிதைகளின் துண்டுப் பிரசுரமும் ஆகிய நால்வகையான உங்களின் மனமார்ந்த உதவிக்கு கரம்கூப்பி, சிரம்தாழ்த்தி நன்றி கூறுகிறேன்.

இவ்வகை கவி எழுதும் முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும், ஆலோசனைகளும் அவ்வப்போது தந்துதவிய தங்களின் சகோதரர் எனது அன்புக்கும், மதிப்புக்கும்  உரிய தம்பி சதீஸ் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
"சேர்ந்தே இருப்பது, வறுமையும் புலமையும்" என்பதை நீங்கள் கூறியபோது, ஒருகணம் எனது உள்ளம் சிலிர்த்தது. ஒரு கவிஞன் எத்தனை விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகிறான், எத்தனை விதமான சோதனைகள் அவனை ஆட்கொள்கிறது என்பதை யதார்த்தமாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.

நீங்கள் கூறிய கருத்துக்கள் அவ்வளவும் எனது நெஞ்சில் ஆணித்தரமாகவே பதியப்பட்டுள்ளது. நீங்கள் கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் காலமெனும் கருவறைக்குள் வேரோடிய வித்துக்கள், வைரத்தில் பொறிக்கப்பட்ட முத்துக்கள்.

இத்துடன் அந்திமாலை இணையத் தளமும், அதன் நிர்வாகிகளும் நலம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து மடலை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்.

இப்படிக்கு 
அன்பு மறவாத 
ச.சேவியர் வில்பிரெட்(பாலசிங்கம்)
3 ஆம் வட்டாரம் 
அல்லைப்பிட்டி 

குறிப்பு: தங்களால் எனக்குக் 'கவி வித்தகர்' விருது வழங்கப்பட்ட நிகழ்வை அறிந்த உள்நாடு மற்றும் வெளிநாடுவாழ் உறவுகள், தொலைபேசியில் எனக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு இப்படி ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்த அந்திமாலைக்கும் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டார்கள்.
தாய் உறவு, தாய்மொழிப் பற்று, தாய் நாட்டின்மீது நேசம் போன்றவை ஒருவனின் உள்ளத்தில் இருந்தால் அதுவே உரிமை முழக்கமாகக் கர்ச்சிக்கும். நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக