புதன், பிப்ரவரி 16, 2011

ஓர் அறிமுகம்

ஒரு விஞ்ஞானி அத்தியாயம் 3

வழக்கமாக ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு முன்பாக, அப்புத்தகத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பதற்காக அப்புத்தகத்தை லேசாக ஒருதடவை புரட்டிவிடுவது அவரது வழக்கம்.

அவ்வாறே அப்புத்தகத்தையும் புரட்டியபோது அதில் அச்சிடப்பட்டிருந்த படமொன்று அவரது கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது. அப்படத்தில் ஒரு மலையின் மேல் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் மண்வெட்டி போன்ற ஒரு கருவியின் மூலம் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ந்த ட்ரைலோபைட் பூச்சியினம் 

குறிப்பாக அந்த ஆராய்ச்சியாளர்கள் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் தரையில் வாழ்ந்த  ட்ரைலோபைட் (Trilobite)  என்ற கடல் பூச்சியின் புதை படிவங்களை அகழ்ந்து எடுத்துக் கொண்டு இருப்பதாகவும், அந்த இடம் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில், அதாவது அறுநூறு அடி ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
 
அந்த விபரத்தைப் புகைப் படத்துடன் சேர்த்துப் படித்ததால், நம் விஞ்ஞானிக்கு  "அந்த மலையானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருக்க வேண்டும்" என்ற எண்ணம் தோன்றியது. அந்த 'எண்ணம்' தன் மனதில் ஏற்பட்ட அந்தக் கணத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார் விஞ்ஞானி அவர்கள்:
"அந்த ஒரு கணம் நான் இந்த உலகத்திலேயே இல்லை.எங்கோ சென்று திரும்பியது போன்ற ஒரு உணர்வு. நினைவு வந்த பொழுது மேலுதட்டில் லேசாக வியர்த்திருந்தது.அந்த கணத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அந்த நொடியிலேயே நான் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டதை உணர்ந்தேன்".

 நிலப் பகுதிகள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்திருக்கிறது என்பதே அது.

அதன் பிறகு இணையத் தளங்களில் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளை அவர் வாசித்தபோது, அவைகள் எல்லாம் மேற்போக்கான விளக்கங்கள் என்பதையும், அடிப்படை ஆதாரமற்ற  ஊகங்கள் என்பதையும், அவர்களின் கருத்துக்களில் பல முரண்பாடுகள் இருப்பதையும் அறிந்து கொண்டார். தான் சேகரித்த, கற்றுக்கொண்ட சகல உண்மைகளையும் ஒன்று திரட்டி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். முதன்முதலில் 'குமுதம்' இதழில் 2005ஆம்  ஆண்டு 'வளரும் பூமி' என்ற தலைப்பில் இவரது கண்டு பிடிப்புப்  பற்றி செய்திக் கட்டுரை ஒன்று வெளியானது. அதன் பிறகு 2007ஆம் ஆண்டு தினமணிக் கதிரில் "கண்டங்கள் நகரவில்லை வளர்கின்றன" என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியானது.
விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள்
இவர், தான் அறிந்துகொண்டவற்றை எல்லாம் விளக்கிக் 'கடல், கண்டங்கள், கிரகங்கள்'. என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி, அதை வெளியிடுவதற்காக 'விகடன் பிரசுரத்தை' அணுகினார். நீண்ட காலமாக பதிலெதுவும் கிடைக்கவில்லை.திடீரென்று ஒருநாள் விகடனில் இருந்து தொலைபேசியில் திரு ஸ்ரீராம் என்ற நண்பர்  "புத்தகம் பதிப்பில் இருப்பதாகத்" தெரிவித்தார்.
 நம் விஞ்ஞானி அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.'பூமிப் பந்தின் புதிர்கள்' என்ற அந்த புத்தகம் தற்பொழுது நான்காவது பதிப்பு வெளியாகியிருக்கிறது.

நிலம் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற இவரது ஆய்வுக் கட்டுரையை இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த டாக்டர் நிதிஸ் பிரியதர்சி(Nitish Priyadarshi) அவர்கள் தனது nitishpriyadarshi.blogspot.com என்ற தனது வலைத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
(தொடரும்)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக