வியாழன், பிப்ரவரி 17, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? அத்தியாயம் 18

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன்
ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே கொலம்பஸ் ஜெனோவா மன்னரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு கடற்படைப் பிரதிநிதி ஆனான். அவனது இருபத்தியிரண்டாவது வயதில் கிரேக்க நாட்டுக்கருகில் இருக்கும் 'ஜெனோவ்' குடியிருப்புகள் அடங்கிய  தீவாகிய 'சியோஸ்'(Chios) எனும் நிலப்பரப்பு கொலம்பஸ்ஸின் பொறுப்பில் விடப்பட்டது.
அதற்கு அடுத்து வந்த காலப்பகுதிகளும் கொலம்பஸ்ஸின் வாழ்வில் எழுச்சியான காலப் பகுதிகளாகவே அமைந்தன. அக்காலத்தில் ஒவ்வொரு ஐரோப்பிய அரசும் மிகவும் சிறப்பான, வலிமையான கடற்படையினை வைத்திருந்தன. காரணம் வலிமையான கடற்படையை வைத்திருக்கும் அரசு மட்டுமே தனக்கு நேரும் ஆக்கிரமிப்புகளை முறியடிக்கவும், தனது நாட்டு வணிகர்கள் கொண்டுவரும் தங்கம், முத்து, யானைத் தந்தம், பட்டு போன்ற விலையுயர்ந்த செல்வங்களைப் பாதுகாப்பாகத் தனது எல்லைக்குக் கொண்டுவந்து சேர்க்கவும், கடலில் செல்லும் அந்நியக் கப்பல்களைக் கொள்ளையிட்டுச் செல்வம் சேர்க்கவும் முடியும் என்பதால் 'கடற்படை' என்பது ஒவ்வொரு அரசுக்கும் மிகவும் இன்றியமையாத ஒரு அமைப்பாக இருந்தது. (எகிப்திய, ரோமானியக் கடற்படைக்கு அடுத்தபடியாக ஆசியாவில் மிகவும் வலிமையான கடற்படையை 'ராஜ ராஜ சோழன்' எனும் தமிழ் மன்னன் வைத்திருந்தான் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்க)
அதற்குப் பின்னதாக ஏறக்குறைய 1476 ஆம் ஆண்டளவில் கொலம்பஸ்சிற்கு புதியதொரு பதவி 'சவோனா' நாட்டு மன்னரால் வழங்கப் பட்டது. அதாவது சவோனா நாட்டிற்கு(இத்தாலியின் ஒரு பகுதி) ஆசியாவிலிருந்தும், ஆபிரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்தொகுதிகளில் சிலவற்றை ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகக் கொண்டு செல்லும் கப்பல்களுக்குப் பொறுப்பாகச் செயற்படும் 'அதிகாரி' என்னும் பதவி கொலம்பஸ்சிற்கு வழங்கப் பட்டது. அக்காலத்தில் இத்தகைய 'அதிகாரி' பதவியைப் பெறுபவர்கள் பெரும்பாலும் நாற்பது வயதைத் தாண்டியிருப்பார்கள். ஆனால் கொலம்பஸ் இப்பதவியைப் பெறும்போது அவனுக்கு வயது இருபத்தைந்து மட்டுமே.
இவ்வாறு 'அதிகாரி' பதவியிலிருப்பவர்களுக்குரிய தகுதியானது ஏனைய கடலோடிகள், படைவீரர்கள் போன்றவர்களைவிட வேறுபட்டதாயிருக்கும். காரணம், படைவீரர்கள் என்போர் சண்டையிடுதல், கொள்ளையடித்தல், கைப்பற்றிய நிலப்பகுதிகளைச் சூறையாடுதல் போன்ற தமது 'கடமைகளைச்' செய்வர். ஏனைய நாடுகளில், இத்தகைய செயல்களில் டென்மார்க்கின் வைகிங் (Vikings) மன்னர்களும், அவர்தம் படையினரும் கி.பி.900 இற்கும் 1050 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அதிகமாக ஈடுபட்டனர் என்பதையும், அவர்கள் மிகவும் வலிமையான நாடுகளாகிய பிரித்தானியா, பிரான்சு, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து பெருமளவு செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர் என்பதையும், உலகில் 150 இற்கு மேற்பட்ட நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து (Scotland) பகுதிகளைப் பல ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதையும் இவ்விடத்தில் வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  
இக்காலப்பகுதிகளில் ஒவ்வொரு வணிக அதிகாரியும் சாதாரண படைவீரர்களுக்குரிய திறமைகளை விடவும், மேலதிக திறமையாக அயல் நாடுகளுக்குக் கடற் பாதைகளைக் கண்டுபிடித்தல், தமது நாட்டுக்குக் கொண்டுவரப்படும் செல்வங்களைப் பாதுகாப்பாகத் தமது இராச்சிய எல்லைக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்தல், நாடுகள், சமுத்திரங்கள், குறுகிய பயணத்தால் சென்றடையும் வழிகள் பற்றிய பூகோள அறிவு, தமது இராச்சியம் அண்டைநாட்டின்மீது அல்லது தூர நாட்டின்மீது படையெடுக்கும் பட்சத்தில் அதற்குத் தேவையான படைவீரர்கள், ஆயதங்கள், படகுகள், கப்பல்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு வரும் பணியை 'நிர்வாகம்' செய்யும் திறமையையும் கொண்டிருந்தார்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக