வியாழன், பிப்ரவரி 03, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? அத்தியாயம் 16

ஆக்கம். இ.சொ.லிங்கதாசன் 
இவற்றுக்கெல்லாம் காராணமான தனது மகனை அந்தத் தந்தை, கோபம் பீறிட்டு எழும்போதெல்லாம் அடித்து, உதைத்துத் துன்புறுத்தினார். அவ்வாறு செய்யும்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது, அவர் நையப் புடைத்துக் கொண்டிருக்கின்ற அந்தச் சிறுவன் நாளை 'உலக சரித்திரத்தில்' முக்கிய இடம்பிடிக்கப் போகிறான் என்பது.


அது மட்டுமன்றி, கொலம்பஸ்ஸின் அயலவர்கள் அவன் தன்னந்தனியே மேற்கொண்ட துணிச்சலான கடற்பயணம் பற்றி பெருமையாகப் பேசும்போதெல்லாம், தன் மகனைப்பற்றிப் பெருமை கொள்வதற்குப் பதிலாக, அவன் தொலைத்து விட்டு வந்த படகிற்காகத் தான் செலுத்த வேண்டியுள்ள கடன்தொகை பற்றியே ஞாபகம் வந்ததால், அந்த ஏழைத் தந்தையால் அவன்மீது கடும் கோபம் கொள்ள மட்டுமே முடிந்தது.
வருடங்கள் சில உருண்டோடின, அக்காலத்தில் இத்தாலியின் ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறிய இராச்சியமாக இருந்து வந்தது. ஒரு சிறிய இராச்சியத்தில் வாழும் மக்கள் தமக்கு அயலிலுள்ள இராச்சியம் தமது அரசுக்கு பகை அரசாக இல்லாவிடில், தொழில் நிமித்தம் மேற்படி இராச்சியத்தில் குடியேறுவது வழமையாக இருந்து வந்தது. இவ்வாறே கொலம்பஸ்ஸின் தந்தையும், தனது நெசவுத் தொழில் பெரிய அளவில் வருமானத்தைத் தராததால், தனது இராச்சியத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த 'சவோனா' (Savona) எனும் பெயருடைய இராச்சியத்தில் தொழில் நிமித்தம் தனது குடும்பத்தினருடன் குடியேற நேர்ந்தது. அங்கு ஆரம்பத்தில் ஒரு பால் பண்ணையில் கூலியாளாக வேலைக்குச் சேர்ந்த அவர், சில வருடங்களின் பின்னர் சொந்தமாகவே ஒரு சிறிய பாலாடைக் கட்டி (Cheese) தயாரிப்புத் தொழிற்சாலையை நிறுவினார். இதே காலப் பகுதியில் ஏறக்குறைய 1470 ஆம் ஆண்டளவில் கொலம்பஸ்சிற்கு 19 வயதாக இருக்கையில் அவன் தான் வாழ்ந்த தேசத்தின் கடல் எல்லையைக் காப்பாற்றும் 'கடற்படையில்' சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்கள் 15 வயதைத் தாண்டியிருந்தால் தமது தேசத்தைக் காப்பாற்றுவதற்காக படையில் சேரவேண்டியது அவசியமானதாகும். சில தேசங்களில் இந்த வயதெல்லை 14 என்றோ 16 என்றோ அல்லது 18 என்றோ மாறுபட்டு காணப் பட்டது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக