புதன், ஜனவரி 05, 2011

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 14

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
பாட்டிக்கு உணவளித்ததன்மூலம், 'புல்வேளூர்ப் பூதன்' என்ற அந்தக் குடியானவன், பாட்டியின் பாட்டில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இறவாப் புகழ் பெறுகிறான். ஒளவைப் பாட்டியின் பெயர் உள்ளவரைக்கும் தமிழுலகில் 'அம்மனிதனும்' வாழ்வான்". என்றேன் பெருமிதத்தோடு.
அவரும் சிரித்துக் கொண்டே நீங்கள் சொல்வது மெத்தச் சரி, அது மட்டுமன்றி, அவன் பாட்டிக்கு அளித்த உணவுமல்லவா தமிழ் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது, என்று புதியதொரு பீடிகையைப் போட்டார்.
"என்ன சொல்கிறீர்கள்?  குழப்பத்துடன் கேட்டேன்.
"மோர்க் குழம்பைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார்.
என்னது மோர்க் குழம்பா? "எனது வாழ்நாளில் அவ்வாறு ஒரு குழம்பைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லையே" என்றேன் நான் வியப்பு அடங்காதவனாக.
அவரும் சிரித்துக் கொண்டே "எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நினைக்கும்போதே வாயில் நீர் ஊறும் கறி வகைகளில் மோர்க்குழம்பும் ஒன்று" ஆனால் இந்த மோர்க்குழம்பு இலங்கையில் பிரபலமாகவில்லையே என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது, சரி இலங்கையில், உங்கள் பிரதேசத்தில் புளிப்புச் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கறிவகைகள் எதுவுமே பிரபலம் இல்லையா? என்று புதிய வினாவைத் தொடுத்தார். நான் இடையில் குறுக்கிட்டுத் தொடர்ந்தேன். "இருக்கிறது இலங்கையில் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் 'கத்தரிக்காய்ப் பிரட்டல்' குழம்பு சமைக்கும்போது எப்போதும் புளியைக் கொஞ்சம் அதிகமாகவே சேர்ப்பார்கள், அந்தக் குழம்பு கொஞ்சம் புளிப்புச் சுவை கூடியதாகவே இருக்கும். அதனை நினைக்கும்போது வாயில் உமிழ்நீர் சுரக்கும், இதுதவிர 'புளிக்கறியை' நினைத்தாலும் வாயில் நீர் சுரக்கும்" என்றேன்.

"என்னது புளியில் கறி சமைப்பீர்களா? என்றார் கண்களை அகலத் திறந்தவாறு. அவரது செய்கை எனக்குச் சிரிப்பை மூட்டியது, ஒருகணம் சிரிக்க ஆரம்பித்த நான் இடையில் நிறுத்திக் கொண்டு கூறினேன். "இல்லையில்லை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் 'புளிக்கறி' என்றால் புளியில் தயாரிக்கப்படும் கறி அல்ல, இலங்கையின் யாழ் மாவட்டத்தில் சில குடும்பங்களில் இரவு உணவு முடிந்தபின்னர், அகால வேளைகளில், அல்லது தேங்காய் தட்டுப்பாடான ஒரு சூழலில் மக்களின் கைகளில் மீன், நண்டு, இறால் போன்ற கடலுணவுகள் கிடைத்தால் அவற்றை அடுத்த நாட் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காகவோ, அல்லது உடனடியாக உண்பதற்காகவோ மக்கள் மேற்படி கடலுணவில் 'புளிக்கறி' தயாரிப்பார்கள். அதாவது அரைத்த மிளகாய்க் கூட்டுடன் சிறிது வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு போன்றவற்றையும் சேர்த்து இதில் சுவையை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக 'புளியை' கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து(போதுமான தண்ணீர் கலந்து) 'புளிக்கறி' தயாரிப்பார்கள். இந்த எளிமையான கறியில் 'புளி' முக்கிய பங்கு வகிப்பதால் யாழ் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இதற்குப் 'புளிக்கறி' என்று பெயர், எனது சொந்த ஊராகிய 'தீவகத்தில்' இதைப் 'புளித்தண்ணி' என்று அழைப்போம், யாழ் மாவட்டத்தின் வடமராட்சியில் இதற்குப் 'புளியாணம்' என்று பெயர்". என்று புளிக்கறியைப் பற்றி ஒரு விரிவுரை ஆற்றினேன்.
எனது விளக்கத்தை மெய்மறந்து ரசித்த அவர் "அபாரம், அபாரம்" என்ற பாராட்டுடன் தொடர்ந்தார். "நீங்கள் சொல்வது மிகவும் சரி, மனிதனுக்கு இனிப்புச் சுவைக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்தமான சுவை 'புளிப்புச் சுவை' ஆகும். அந்த வகையிலேயே இந்த மோர்க்குழம்புச் சமாச்சாரமும், உங்கள் ஊரில் பிரசித்தமான 'புளிக்குழம்புச்' சங்கதிகளும் விளங்குகின்றன"என்றார்..
"நீங்கள் கூறுவது எல்லாமே சரிதான், ஆனால் மோர்க்குழம்பு என்றால் என்னவென்று எனக்கு நீங்கள் இன்னமும் சொல்லவே இல்லையே" என்றேன் நான் பொறுமையிழந்தவனாக.


இருங்கள் சொல்கிறேன் என்றவர் ஆரம்பித்தார். "கத்தரிக்காய்க் கறி, வெண்டிக்காய்க் கறி, பூசணிக்காய், சாம்பல் பூசணிக்காய்(இலங்கைத் தமிழில் 'நீத்துப் பூசணிக்காய்) சுரைக்காய்க் கறி போன்ற குழம்புகளில்  ஏதேனுமொன்றில் மோர் கலந்து சமைக்கப் பட்டிருந்தால் சுவை எப்படிப் பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்றார். "என்னால் அந்தச் சுவையை ஊகிக்க முடிகிறது" என்றேன். 
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக