வியாழன், டிசம்பர் 09, 2010

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா, கொடியவனா? அத்தியாயம் 8



ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
அழுகின்ற சிறுவனைத் தேற்றுகின்ற அளவுக்கு 'இத்தாலிய மொழி' தெரிந்த மீனவர்கள் யாரும் அப்படகில் இருக்கவில்லை. பிரெஞ்சு மொழியில் ஏதேதோ கூறி அவனைச் சமாதானப் படுத்த முனைந்தனர். ஆனாலும் அவன் அழுது கொண்டேயிருந்தான்.இவ்வாறு அவன் அவர்களது தேற்றுதலையும் பொருட்படுத்தாது அழுதுகொண்டிருக்கும் வேளையில்தான் அந்தத் திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்தது.


அவன் பயணிப்பதற்கு பயன்படுத்திய அந்தச் சின்னஞ் சிறிய படகு கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. அதை தடுப்பதற்கு மீனவர்கள் யாரும் முனையவில்லை. அது இன்னொருவருடைய பொருளாக இருப்பினும், தான் அதைத் திருடிக்கொண்டு வந்திருப்பினும் அது தனது பொருளாகவே கொலம்பஸ் எண்ணினான். மூழ்குகின்ற அந்தப் படகை மூழ்கவிடாது தடுக்குமாறு அவன் மீனவர்களை நோக்கிக் கதறி வேண்டினான். ஆனால் மீனவர்கள் யாரும் அவனது கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. அவன் இத்தாலிய மொழியில் கூறியது மீனவர்களுக்குப் புரியவில்லையாயினும், அவனது சைகையின் மூலம் அவன் என்ன கூறுகிறான் என்று அவர்களால் ஊகித்து உணரமுடிந்தது. இருப்பினும் அவர்கள் அப்படகைக் காப்பாற்ற முனையவில்லை. காரணம் அப்படகானது ஏற்கனவே மழையாலும், கடல்கொந்தளிப்பாலும் ஏற்கனவே தண்ணீரால் நிரம்பியிருந்தது. அவர்கள் சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்தச் சிறிய படகு கடலில் மூழ்கும் தறுவாயில் இருந்தது. இதனாலேயே அவர்கள் அச்சிறிய படகை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை.


சிறுவன் கொலம்பஸின் அழுகையும், கதறலும் நின்றபாடில்லை. இறுதியாக அவனது அழுகையை நிறுத்துவதற்காக மீனவர்கள் அவனை அதட்டவேண்டிய நிலை ஏற்பட்டது. மீனவர்களின் அதட்டலுக்குப் பயந்த கொலம்பஸ் இறுதியாக அழுகையை நிறுத்தினான். தனது வாழ்வில் தான் ஆர்வத்தின் காரணமாக பயணிக்க நினைத்த 'பல்மாரியாத் தீவு' இன்னமும் கண்ணுக்கெட்டாத தூரத்திலேயே இருந்துகொண்டிருந்தது. அவனது தாய்மண்ணாகிய 'ஜெனோவாக் கடற்கரைப் பிரதேசம்' அவனது கண்ணைவிட்டு விலகிச் சென்றுகொண்டிருந்தது. இப்போது அவன் தன்னைக் காப்பாற்றிய மீனவர்களின் தாயகமாகிய 'மொனாக்கோ' நாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறான் என்பதனை அந்த அப்பாவிச் சிறுவன் அறியவில்லை.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக