சனி, நவம்பர் 27, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 6

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ளவேண்டியவை:
 10. ஒரு குழந்தையானது, தனக்குத் தேவையான அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தாயின் கருவிலிருக்கும்போதும், மற்றொரு மூன்றிலொரு பகுதியைத் தனது ஐந்தாவது வயதிற்குள்ளும்("ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது") இறுதி மூன்றிலொரு பகுதியைத் தனது வாழ்நாளின் மீதமுள்ள காலப் பகுதி முழுவதும் (சுமார் 70 வயதுவரை) கற்றுக் கொள்கிறது என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அபிமன்யுவும் சுபத்திராவும் 
இதை விளக்க இரண்டு கதைகளை உங்களுக்குக் கூற விரும்புகிறேன் முதலாவது எமது இலக்கியங்களில் ஒன்றாகிய மகாபாரதத்தில் வரும் ஒரு சிறு சம்பவம், ஆனால் மிகவும் முக்கியமான சம்பவம், பஞ்ச பாண்டவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனனுக்கு மனைவியாகிய சுபத்திராவுக்கு, அவள் கர்ப்பிணியாக இருந்த காலப் பகுதியில், ஒரு முனிவர் நீதி இலக்கியங்களில் இருந்து எடுகோள்கள் எடுத்துக் கதை சொல்லிக்கொண்டிருந்தார். கதை கேட்டுக்கொண்டிருந்த தாயானவள், ஒரு இருக்கையோடு சாய்ந்து அமர்ந்திருந்தாள், இவ்வாறு சாய்ந்து இருந்தவள் சிறிது நேரத்தில் அப்படியே உறங்கிப் போய்விடுகிறாள், இதைக் கவனியாத முனிவர் தொடர்ந்து கதையைக் கூறிக் கொண்டிருந்தார், ஆனால் முனிவரின் கதையை தொடர்ந்து செவிமடுப்பதற்கு ஆதாரமாக "ம், ம், ம்" என்ற ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது, ஆனால் தாயானவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் முனிவர் அந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார், அதாவது "ம்,ம்,ம்" என்று கதை கேட்டுக்கொண்டிருந்தது சுபத்திரா அல்ல, அவளது வயிற்றிலிருக்கும்(கர்ப்பப் பையிலிருக்கும்) குழந்தை என்பதை. அவ்வாறு கருவிலிருக்கும்போதே கதைகேட்ட குழந்தைதான் பின்நாளில் 'வீர அபிமன்யு' என்று புகழ்பெற்றான் என்கிறது மகாபாரதம். மகாபாரதம் உண்மைக் கதையா? இவ்வாறான சம்பவங்கள் உண்மையானவையா? என்பதல்ல இங்கு விடயம், நவீன மருத்துவ உலகினர் கூறுகின்ற "குழந்தை தனது மூன்றிலொரு பங்கு அறிவைத் தாயின் கருவிலிருக்கும்போதே பெற்றுவிடுகிறது" என்ற கருத்துடன், நான் மேலே கூறிய கதை ஒத்துப் போகிறதல்லவா?

அர்ச்சுனனும் சுபத்திராவும் 
 'தாயின் கருவிலிருக்கும் சிசுவானது புறச் சூழலிலுள்ள விடயங்களையும் உணரும் தன்மையுள்ளது' என்ற உண்மையை, எமது முன்னோர்கள் இத்தகைய கதைகளின்மூலம்  
மறைமுகமாக எமக்கு உணர்த்தியுள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டவே மேற்படி கதையை உங்களுக்குக் கூறுகிறேன். இக்கதை சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் வாசித்ததாகும். இதில் நான் ஞாபக மறதி காரணமாக பெயர்களை தவற விட்டிருந்தால், அல்லது மாற்றிக் கூறியிருந்தால் சான்றோர்கள் மன்னிக்கவும். மேற்படி சம்பவத்தை வாசகர்களின் முன் சமர்ப்பிப்பதே எனது நோக்கமாக இருந்தது.
இதேபோல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் எழுபதுகளில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.
(தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

Ravi Skjern Denmark சொன்னது…

Jeg kan godt lide den.

கருத்துரையிடுக